நியூசிலாந்துடன் டெஸ்ட் தோல்வி! ரோஹித், கோலிக்கு பிசிசிஐ போட்ட புதிய கண்டிஷன்!

புனேவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே எட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று இந்தியா துடிப்புடன் இருந்தது. இருப்பினும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது இந்தியா. இதன் காரணமாக அணியில் சில அதிரடி நடவடிக்கைகளை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது. அதன்படி மும்பையில் நவம்பர் 1ம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெறும் பயிற்சி அமர்வுகளில் அனைத்து வீரர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அணி நிர்வாகம் கட்டாயமாக்கி உள்ளது. 

இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாத வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு பயிற்சி அமர்வுகளில் வீரர்கள் அவர்களின் விருப்பப்படி கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  காரணம் ஐந்து நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் அதிகம் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளதால் இந்த சலுகைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. பொதுவாக அணியில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சீனியர் வீரர்களுக்கு இந்த தளர்வு கொடுக்கப்படுகிறது. அவர்களின் பங்கு அணிக்கு முக்கியம் என்பதால் அவர்களை பயிற்சி அமர்வுகளுக்கு வர சொல்லி தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள். 

A tough loss for #TeamIndia in Pune.

Scorecard https://t.co/YVjSnKCtlI #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/PlU9iJpGih

— BCCI (@BCCI) October 26, 2024

இளம் வீரர்கள் மற்றும் வளர்ந்து வரும் வீரர்கள் இது போன்ற வலை பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள். சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரையே இந்திய அணி இழந்துள்ளதால் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும், அப்படி இல்லை என்றால் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். இந்திய அணி அடுத்து நடைபெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் 4ல் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இதில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டியும் உள்ளது.  அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் உள்ள லாட்ஸ் மைதானத்தில் உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

மும்பையில் நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகளை இழக்கும். இந்திய அணி வெளியேறும் பட்சத்தில் நியூசிலாந்து, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் மும்பைக்கு தங்களது சொந்த வாகனத்தில் வந்து சேர்வார்கள் என்றும் மற்ற வீரர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மும்பைக்கு வந்து சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.