புரி: ஒடிசாவில் டானா புயலால் 36 லட்சம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான டானா புயல் கடந்த 25-ம் தேதி அதிகாலையில் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. அத்துடன் கடலோரப் பகுதி முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி நேற்று கூறியதாவது: டானா புயலால் பெய்த கனமழையால் ஒடிசாவின் 14 மாவட்டங்களுக்குட்பட்ட 1,671 கிராம பஞ்சாயத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த 35.95 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.1 லட்சம் பேர் தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு 6,210 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. அதேநேரம் புயல் காரணமாக இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
வெள்ளம் வடிந்து வருவதால் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இன்று (நேற்று) காலை நிலவரப்படி 1,178 முகாம்களில் மக்கள் தங்கி உள்ளனர். மற்ற முகாம்களில் இருந்தவர்கள் வீடு திரும்பிவிட்டனர்.
கேந்திரபாரா, பலாசூர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் வெள்ளம் காரணமாக 5,840 வீடுகள் முழுவதுமாக அல்லது பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். அத்துடன், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, கடலோரப் பகுதியில் உள்ள கூரை வீடுகளுக்கு பதில் மாடி வீடு கட்டித் தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.