தமிழக அரசியல் களத்தில் புதியதொரு அரசியல் கட்சியாக உதயமாகி இருக்கிற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடந்து முடிந்திருக்கிறது.
சுமார் ஐந்து லட்சம் பேர் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விக்கிரவாண்டி மாநாட்டில் கலந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.
மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தற்போது தமிழக அரசியல் அரங்கில் ஒருவித சலசலப்பை உண்டாக்கியிருக்கிறதென்றே சொல்லலாம். கொள்கை ரீதியாக முதல் எதிரி பாரதிய ஜனதா என்பதைச் சொல்லாமல் சொல்லி விட்டார். அடுத்த எதிரி திமுகதான் என்பதை ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தை மூலம் நேரடியாகவே சொல்லி விட்டார். சமூக வலைதளங்களெங்கும் இதையொட்டிய விவாதங்கள் நடந்து வருகிறது.
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் கட்சியின் முதல் மாநாட்டுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
நாம் தமிழர் சீமானும் விஜய்க்குத் தனது வாழ்த்தைச் சொல்லியிருந்தார்.
சினிமா துறையிலிருந்து பலர் வெளிப்படையாக வாழ்த்து சொல்ல… திமுக ஆதரவு நட்சத்திரங்கள் சிலர் மௌனம் காத்தனர். நடிகர் பிரபு உள்ளிட்ட சிலர் மாநாடு முடிந்ததுமே வாழ்த்துகளை அனுப்பி விட்டனர். திமுக கூட்டணியிலிருக்கும் திருமாவளவன், விஜய் சமீபத்தில் பெரியார் திடல் வந்ததற்கு வாழ்த்து சொல்லியிருந்தார். மாநாட்டுக்கு இதுவரை வாழ்த்துச் சொன்னதாய் தெரியவில்லை. ஆனால் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மாநாடு தொடங்கும் போதும் முடிந்ததுமே தன் வாழ்த்தைப் பதிவிட்டிருந்தார்.
பா.ம.க தரப்பிலிருந்து நோ ரியாக்ஷன். ஏனெனில் விஜய்யும் விஜயகாந்தைப் போலவே அந்தக் கட்சி ஓரளவு வலுவாக இருக்கும் பகுதியிலேயே தன் முதல் மாநாட்டை நடத்தியதில் அவர்கள் கொஞ்சம் காண்டாகிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். எனவேதான் விஜய் கட்சியிலிருந்து சிலர் தங்கள் பக்கம் வந்து சேர்ந்ததாக சொன்னார்கள்.
நடிகர் கமல் திமுக கூட்டணியிலிருந்த போதும் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய அன்றே விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்பதாகச் சொல்லி விட்டார்.
இன்னொருபுறம் விஜய் ஆரம்பத்திலேயே பெரியார் படம், பெரியார் சிலைக்கு மரியாதை என தன் பாதையைச் சொல்லி விட்டதால் பாரதிய ஜனதா விஜய்யின் அரசியல் வருகையில் ஆர்வம் காட்டவில்லை.
அரசியல்வாதிகள் தவிர தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிற துறையின் முக்கியப் பிரமுகர்கள் பலருமே விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி விஜய்க்கு தற்போதைய ஆளுங்கட்சி சார்பில் வாழ்த்துச் சொல்லப்பட்டதா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய போது உதயநிதி செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் சொன்னதன் மூலம் வாழ்த்துச் சொன்னதாகத் தெரிகிறது.
அதேநேரம், ‘முதல்முறையாக தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது அவருக்கு வாழ்த்துச் சொல்லவில்லை விஜய். சமீபத்தில் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்ற போதும் அவருக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. இந்த இரண்டு நிகழ்வுகளின் போது வாழ்த்துச் சொல்ல விஜய் மறந்தது ஏன் என இன்று வரை யாருக்கும் தெரியவில்லை’ என்கின்றனர் திமுக-வினர்.
ஆனால் தவெக தொண்டர்களோ ‘2021 தேர்தல் முடிஞ்சதுமே விஜய் தன்னுடைய அரசியல் எதிரி யார் எனத் தீர்மானித்து விட்டார்’ என ஸ்டாலினுக்கு விஜய் வாழ்த்துச் சொல்லாத அந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டியே ஆர்ப்பரிக்கிறார்கள்.
எது எப்படியோ 2026 தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.