“ஏழைகளின் வலியை அன்னை தெரசா மூலம் உணர்ந்தேன்” – வயநாட்டில் பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி

வயநாடு (கேரளா): “அன்னை தெரசாவின் ஆலோசனையின் பேரில், அவருடைய சகோதரிகளுடன் இணைந்து சேவை செய்யத் தொடங்கியபோதுதான் ஏழை, எளிய மக்களின் வலியை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்” என்று பிரியங்கா காந்தி கூறினார்.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வதேரா, மீனங்காடி என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், “இங்கே எனக்குக் கிடைத்திருக்கும் அன்பிற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தேன். அப்போது பல்வேறு மக்களோடு நான் பேசினேன். அவர்களில் ஒருவர் ராணுவ வீரர். அவர் என்னிடம், தனது அம்மா என்னை சந்திக்க விரும்புவதாகவும், அவரால் நடக்க முடியாது என்றும் கூறினார். அதனால் நான் அவருடைய வீட்டுக்குச் சென்றேன்.

அவர், என்னை அவரது குழந்தையைப் போல் என்னை கட்டிப்பிடித்தார். வயநாட்டில் எனக்கு ஓர் அம்மா இருப்பது போல் உணர்ந்தேன். அவர் என்னிடம் ஒரு ஜெபமாலையை கொடுத்தார். அதனை நான் எனது அம்மாவிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது கடந்த கால சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. அதனை நான் பொதுவெளியில் பகிர்ந்தது கிடையாது. பொருத்தமாக இருப்பதால் இப்போது பகிர்கிறேன்.

அப்போது ​​எனக்கு 19 வயது இருக்கும். என் தந்தை இறந்து 6-7 மாதங்களுக்குப் பிறகு, அன்னை தெரசா, என் அம்மாவைச் சந்திக்க எங்கள் வீட்டிற்கு வந்தார். காய்ச்சல் காரணமாக நான் படுக்கையிலேயே இருந்தேன். அறையை விட்டு வெளியே வராமல் இருந்த என்னைப் பார்க்க அன்னை தெரசா எனது அறைக்கே வந்தார். என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். எனக்கு ஒரு ஜபமாலையை கொடுத்தார். அப்பா இறந்த சோகத்தாலும், காய்ச்சல் காரணமாகவும் நான் மிகவும் சோர்வுடன் இருந்ததை அறிந்த அவர், நீங்கள் என்னோடு சேர்ந்து சேவை செய்ய வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

5-6 வருடங்களுக்குப் பிறகு, எனக்கு திருமணமாகி, எனக்கென்று குடும்பம் என ஆன பிறகு டெல்லியில் அன்னை தெரசாவின் சகோதரிகளோடு சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். குழந்தைகளுக்கு ஆங்கிலம், இந்தி சொல்லிக் கொடுப்பேன். முதல்முறையாக இதை நான் பொதுவெளியில் பகிர்கிறேன், அதுவும் பொருத்தமாக இருப்பதால். குளியலறையை சுத்தம் செய்வது, தரையை சுத்தம் செய்வது, சில நேரங்களில் சமைப்பது, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது என பல்வேறு பணிகளைச் செய்தேன். அப்போதுதான் அவர்களின் துயரம், வலி ஆகியவற்றை நான் புரிந்து கொள்ளத் தொடங்கினேன். பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வாறு நாம் ஒன்றாக சேர்ந்து உதவ முடியும் என்பதும் புரிந்தது.

வயநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு நான் எனது சகோதரர் ராகுல் காந்தியோடு நான் இங்கு வந்தேன். அப்போது, சமூகங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியும் என்பதை நேரில் அறிந்து கொண்டேன். என்ன மதம், என்ன தொழில் என்ற பேதம் இன்றி வயநாடு மக்கள் அனைவரும் மற்றவர்களுக்கு உதவியதைப் பார்த்தேன். பேரழிவு நேரங்களில் பேராசையுடன் மனிதர்கள் சிலர் செய்யும் செயல்களை நான் இங்கு பார்க்கவில்லை. குழந்தைகள்கூட பெருமித உணர்வுடனே எங்களிடம் பேசினார்கள். என்ன ஒரு துணிச்சல் உங்களிடம் உள்ளது என்பதை நான் பார்த்தேன்” என்று பிரியங்கா காந்தி பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.