புதுடெல்லி: உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தற்போது ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்மேனியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் சர்வதேச ராணுவத் தளவாட தேவைகளை ஈடுசெய்யும் அளவுக்கு உள்நாட்டில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. தேஜஸ் இலகு ரக போர் விமானங்கள், விமானம் தாங்கி போர்க்கப்பல்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், தனுஷ் பீரங்கி, எம்பிடி அர்ஜூன் டாங்க், இலகு ரக பீரங்கிகள், ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரேடார்கள், ராணுவத் தளவாட மென்பொருட்கள், ஆகாஸ் ஏவுகணைகள் ஆகியவை உள்நாட்டில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் தனியார் துறையின் பங்களிப்பு 21 சதவீதம். இது குறித்து இத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் ராணுவத் தளவாட தொழிற்சாலை விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ராணுவத் தளவாடத் தயாரிப்பில் தற்போது 16 பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 430 நிறுவனங்கள் உரிமங்கள் பெற்று ராணுவத் தளவாடப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன.
16,000 நடுத்தர மற்றும் சிறிய ரக தொழில் நிறுவனங்களும் ராணுவத் தளவாட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே நாட்டில் ராணுவத் தளவாட பொருட்கள் தயாரிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
இந்தியா தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவத் தளவாட பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. இதில் முதல் 3 இடத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்மேனியா ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள பிரபல விமான தயாரிப்பு நிறுவனங்களான லாக்கீட் மார்ட்டின் மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு, இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பாகங்கள் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பிரான்ஸ் நாட்டுக்கு ஏராளமான மென்பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அர்மேனியா நாட்டுக்கு ஏடிஏஜிஎஸ் பீரங்கிககள், பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர்கள், ரேடார்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2014-15-ம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் தயாரித்த ராணுவத் தளவாட பொருட்களின் மதிப்பு ரூ.46,429 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் ரூ1 லட்சத்து 27 ஆயிரத்து 265 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.