TVK: "பண்டிகை கால தள்ளுபடி விற்பனை போல" – 'ஆட்சியில் பங்கு' என்ற விஜய் பேச்சை விமர்சிக்கும் திருமா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று (அக்டோபர் 27) நடைபெற்று முடிந்தது. கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட இந்த மாநாட்டில், `அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் என்ன பாயாசமா?’ என்று பா.ஜ.க மற்றம் தி.மு.க-வைக் குறிப்பிட்டு விமர்சித்தார் விஜய். மேலும், அவர்களை அரசியல் எதிரிகள் எனவும் கூறிய விஜய், தம்மை நம்பி வருபவர்களுக்கு அதிகாரத்திலும் பங்கு என்று 2026 தேர்தலுக்கான கூட்டணி அழைப்பை விடுத்தார்.

தவெக – விஜய்

விஜய்யின் இந்த அறிவிப்பு தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று பேச்சுக்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று தொடர்ச்சியாக முழங்கிவரும் வி.சி.க தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “விஜய், தனது கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டுமென அவர் ஆசைப்படுவது அவருக்கான நம்பிக்கை. ஆனால், பரிணாமத்தில் பல்வேறு படிநிலை மாற்றங்களைக் கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும் என்பது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மை. முதல் அடி மாநாடு, அடுத்த அடி ஆட்சிப் பீடம் என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துகள்.

`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் வள்ளுவப் பெருமானின் சமத்துவக் கோட்பாட்டினைத் தனது முதன்மையான கொள்கையென உயர்த்திப் பிடிக்கும் அவர், ‘பெரும்பான்மை – சிறுபான்மை’ என்னும் பெயரிலான `பிளவுவாதத்தை’ ஏற்பதில்லை என்றும் கூறுகிறார். இந்த நிலைப்பாடு பா.ஜ.க உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு எதிரானது என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது. ஆனால், சங்பரிவார்களின் மதவழி பெரும்பான்மைவாதமும், அதனால் நிலவும் மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழலும் ஒன்றா என்னும் கேள்வி எழுகிறது.

திருமாவளவன்

குறிப்பாக, சிறுபான்மையினரின் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் குறித்த அவரது நிலைப்பாடு என்ன என்பதுவும் கேள்விக் குறியாகிறது. பாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. `அவங்க பாசிசம்னா நீங்க பாயாசமா?’ என ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார். பாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி் செய்கிறார். அவர் பாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் பாசிஸ்டுகள்தான் என்கிறாரா? அவர் யாரை நையாண்டி செய்கிறார்? தி.மு.க-வையா? காங்கிரசையா? இடதுசாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா? பா.ஜ.க – சங்பரிவார்களின் பாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா?

தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் பாசிச எதிர்ப்பு என்பது பா.ஜ.க-சங்பரிவார் எதிர்ப்புதான். இங்கே பாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று அவர் கருதுகிறாரா? அப்படியெனில், பா.ஜ.க- சங்பரிவார் எதிர்ப்பு வேண்டாம் எனக் கூறுகிறாரா? என்ன பொருளில் அந்த நையாண்டி தொனிக்கும் ஆவேச உரை வெடித்தது? பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பா.ஜ.க-வை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். பாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பா.ஜ.க எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு?

தவெக – விஜய்

கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார். ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை. தி.மு.க எதிர்ப்பும், தி.மு.க கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே அவரது அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது.

அவரது உரையில் வெளிப்படும் அதிகார வேட்கையும் அடையாள அரசியலும் பழைய சரக்குகளே. குடும்ப அரசியல் எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களே. ஆக்கப்பூர்வமான – புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை. பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது.

திருமாவளவன்

அ.தி.மு.க-வுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது. ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத்தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில், பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.