புதுடெல்லி: வயநாடு இடைத்தேர்தலுக்காக பிரியங்கா காந்தி மனுதாக்கல் செய்த போது மல்லிகார்ஜுன கார்கே அறைக்கு வெளியே காக்க வைக்கப்பட்டார் என்ற பாஜக குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வேணுகோபால் செய்திநிறுவனத்திடம் கூறும்போது, “அந்த அறையின் கதவு மூடப்பட்டிருந்ததது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும் அறைக்குள் செல்வதற்கு முன்பு சிறிது காத்திருந்தனர்.
பாஜகவால் எப்படி இதுபோன்ற பொய்களைப் பரப்ப முடிகிறது. கூட்டத்தை முடித்துக்கொண்டு நாங்கள் ஆட்சியர் அலுவலகம் வந்த போது அறையின் கதவு மூடப்பட்டிருந்தது. பின்னர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் வந்தனர். அறைக்குள் நுழைவதற்கு முன்பு அவர்களும் சிறிது நேரம் காத்திருந்தனர்.
பின்னர் மல்லிகார்ஜுன கார்கே வந்தார், அப்போதும் அந்தக் கதவு மூடியிருந்ததால் அவர் சிறிது நேரம் வெளியே காத்திருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது கார்கேவும் உடன் இருந்தார்.
பாரதிய ஜனதா கட்சி எப்போதும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை குறிவைக்கிறது. அவர்கள் ஏன் காங்கிரஸ் தலைவர் மற்றும் கட்சிக்கு எதிராக இவ்வாறு பொய்களைப் பரப்புகிறார்கள்? இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் வியாழக்கிழமை கூறுகையில், “மல்லிகார்ஜுன கார்கே அவமானப்படுத்தப்பட்ட மூர்க்கத்தனமான விதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் போன்ற மூத்த தலித் தலைவரை காங்கிரஸ் கட்சி இவ்வாறு கேவலமாகவும், அவமரியாதையாகவும் நடத்திய விதத்தை பார்க்கும் போது வேதனையாக இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சி தீண்டாமையை கடைபிடிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி தலித்துகளை ஆதரிக்கிறது, அவர்களுக்கு சமபங்களிப்பு அளிப்பதாகவும் ராகுல் காந்தி வெளியே பேசுகிறார்.
ஆனால் கட்சிக்குள் தலித்கள் அவமதிக்கப்படுகிறார்கள். மல்லிகார்ஜுன காகேவுக்கு நேற்று என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். இதற்கு பிறகு மக்களிடம் சொல்ல எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சி அம்பலமாகிப் போனது.
கட்சிக்குள் தலித்துக்கள் அவமானப்படுத்தப்பட்டு மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, அதற்காக கல்பெட்டா மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அதற்கு முன்பு, அவரும், ராகுல் காந்தியும் ஒரு மிகப்பெரிய ரோடு ஷோ நடத்தினர்.
2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, பின்னர் வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடக்க இருக்கிறது.