கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.
முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம்(முடா) அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சித்தராமையா மீது நில முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை அமலாக்கத்துறையும் லோக் ஆயுக்தாவும் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர். இதில் சித்தராமையா முதலாவது நபராகவும், அவரது மனைவி பார்வதி 2-வது நபராகவும், மூத்த மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி 3-வது நபராகவும், இளைய மைத்துனர் தேவராஜ் 4-வது நபராகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இளைய மைத்துனர் தேவராஜின் மைசூரு வீட்டில் சோதனை நடத்தினர். கடந்த சனிக்கிழமை லோக் ஆயுக்தா போலீஸார் பார்வதியிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சித்தராமையா, மல்லிகார்ஜூன சுவாமி, தேவராஜ் ஆகியோருக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். பெங்களூரு, மைசூரு, மண்டியா, மங்களூரு ஆகிய ஊர்களில் 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 70-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தியதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனையின்போது மைசூரு நகர மேம்பாட்டு கழகத்தில் நிலம் ஒதுக்கீடு, வீட்டு மனை விற்பனை, கட்டுமான ஒப்பந்தம் ஆகியவை தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, மைசூரு நகர மேம்பாட்டு கழக அலுவலகத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
இந்த விவகாரத்தில் கர்நாடக ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் பைரத்தி சுரேஷ் மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.