துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் உதயநிதி ஸ்டாலின்: இந்து முன்னணி விமர்சனம்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் லோகோவை சென்னையில் வெளியிட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை இனவெறிக்கு தூண்டும் வகையில், இன பேதத்தைத் கல்விக்கூடங்களில் ஏற்படுத்தி மாணவர்களிடையே இனப் பிரிவினையை உண்டாக்கிடும் வகையில் பேசியுள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி வகிக்க தகுதியற்றவர்.

அந்நிகழ்ச்சியில் பேசும்போது கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சங்கிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கல்வியை காவிமயமாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் ஒரு அப்பட்டமான பிரிவினைவாத புரட்டுக் கருத்துக்களை கூறியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோற்றுப்போன திராவிட கருத்தியல்களை மாணவர்கள் மத்தியில் புகுத்துவது உள்நோக்கம் கொண்டது.

எப்போதெல்லாம் தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியிலும், வெறுப்பிலும் உள்ளனரோ அப்போதெல்லாம் தமிழர்களை ஏமாற்ற திமுக கையில் எடுப்பதுதான் திராவிட கருத்தியல், குலத்தொழில், ஆரிய திராவிட இனவாதம், இந்தி எதிர்ப்பு, மொழி வெறி அரசியல் என்பதை தமிழக மக்கள் தற்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ஆகவே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் வகிக்கும் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தங்களது கட்சி சார்பில் பேசட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.