புதுடெல்லி: ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
9-வது ஆயுர்வேத நாள் மற்றும், மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் பிறந்தநாளையொட்டி பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மொத்தம் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்கு இன்று அர்ப்பணிக்கவுள்ளார்.
நாடு முழுவதும் பொதுமக்கள் இலவசமாக மருத்துவச் சிகிச்சையைப் பெற உதவும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தத் திட்டத்தை 70 வயதைக் கடந்தவர்களும் பெறும் வகையில் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனிமேல், 70 வயதானவர்கள் மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையைப் பெற முடியும். முன்பு 70 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே இந்த சிகிச்சையைப் பெறலாம் என்ற விதிமுறை இருந்தது. தற்போது அந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது அகில இந்திய ஆயுர்வேத இன்ஸ்டிடியூட்டின் 2-வது வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த வளாகத்தில் பஞ்சகர்மா மருத்துவமனை, மருந்து உற்பத்திக்கான ஆயுர்வேத மருந்தகம், விளையாட்டு மருந்துகள் பிரிவு, மத்திய நூலகம், ஐடி மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் மையம், 500 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம் அமைந்துள்ளன.
அதேபோல், மத்திய பிரதேசத்தின் மன்ட்சவுர், நீமுச், சியோனியில் அமைந்துள்ள 3 மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் ரோஜ்கர் மேளா மூலம் 51 ஆயிரம் பேருக்கு மத்திய அரசுப் பணியில் சேர்வதற்கான ஆணைகளையும் பிரதமர் மோடி அப்போது வழங்கவுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர், மேற்கு வங்கத்தின் கல்யாணி, பிஹாரின் பாட்னா, உத்தரபிரதேசத்தின் கோரக்பூர், மத்திய பிரதேசத்தின் போபால், அசாமின் குவாஹாட்டி, டெல்லி ஆகிய நகரங்களில் எய்மஸ் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய சேவைப் பிரிவு, மருத்துவ வசதிப் பிரிவுகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும், டெல்லியில் ஜன் அவுஷதி கேந்திராவையும் அப்போது அவர் தொடங்கி வைப்பார். இதைத் தொடர்ந்து ஷிவ்புரி, ரட்லம், கன்ட்வா, ராஜ்கர், மன்ட்சவுர் நகரங்களில் நர்சிங் கல்லூரிகள் அமைத்தல், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்புத் திட்டத்தின் (பிஎம்-ஏபிஎச்ஐஎம்) கீழ் இமாச்சல், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் 21 தீவிர சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி நாட்டவுள்ளார்.
பின்னர் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இஐஎஸ் மருத்துவமனையை அப்போது பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். அதேபோல் ஹரியானாவின் ஃபரீதாபாத், கர்நாடகாவில் நர்சாப்பூர், பொம்மசந்திரா, மத்தியபிரதேசத்தின் இந்தூர், உத்தரபிரதேசத்தின் மீரட், ஆந்திராவில் அச்சுதபுரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையை அமைக்க அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டி வைக்கவுள்ளார்.
அதேபோல் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள 11 எய்ம்ஸ் மருத்துவமனை, இன்ஸ்டிடியூட்களின் சுகாதார சேவையை மேம்படுத்த அங்கு ட்ரோன் தொழில்நுட்பச் சேவை அமல்படுத்தப்படவுள்ளது. மேலும், ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வரவும், அங்கிருந்து வெளிநகரங்களுக்கு அழைத்துச் செல்லவும் அவசர மருத்துவ ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்படவுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகளை டிஜிட்டல்மயமாக்க யு-வின் (U-WIN) இணையதளம் தொடங்கப்படவுள்ளது.
அதேபோல் ஒடிசாவின் கோர்தா, சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் மத்திய யோகா ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் அமைக்கவும், அகமதாபாத் நைப்பர், ஹைதராபாத் நைப்பர், குவாஹாட்டி நைப்பர், மொஹாலி நைப்பர் இன்ஸ்டிடியூட்களில் மருத்துவக் கருவிகள், அதிக அளவில் மருந்துகள் உற்பத்தி, பைட்டோபார்மசூட்டிக்கல்ஸ், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி வைரல் மருந்துகள் தயாரிப்பதற்கான சிறப்பு மருத்துவ மையங்கள் அமைக்கவும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.
மொத்தம் ரூ.12,850 கோடி மதிப்பிலான மருத்துவமனைகள், கல்லூரிகள், மருத்துவத் திட்டங்கள், சிகிச்சை மையங்கள், இன்ஸ்டிடியூட் அமைத்தல் ஆகிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கவுள்ளார்.