`கங்குவா’ திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் சுழன்று கொண்டிருக்கிறார் சூர்யா.
அடுத்த மாதம் 14-ம் தேதி `கங்குவா’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி சில யூ-டியூப் சேனல்களுக்கு நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார் சூர்யா. `தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ ஊடகத்தின் இந்திய பதிப்புக்கு அளித்திருந்த நேர்காணலில் மும்பைக்குக் குடிபெயர்ந்த காரணத்தை எடுத்துக் கூறியிருக்கிறார்.
பேச தொடங்கிய அவர், “இதை பற்றி நான் வெளிப்படையாகவே சொல்வேன். ஜோதிகாவுக்கு 18 வயது இருக்கும்போது அவர் சென்னைக்கு வந்தார். அதன் பிறகு முழுமையாக 27 ஆண்டுகள் சென்னையில்தான் இருந்தார். என்னுடனும் என் குடும்பத்துடன் சென்னையில் இருந்தார். அதற்காக அவருடைய உறவினர்களையும் கரியரையும் விட்டுக் கொடுத்தார். இப்போது மீண்டும் 27 வருடங்களுக்குப் பிறகு அவரின் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்டு வருகிறார்.
ஒரு ஆணுக்கு என்னென்ன விஷயங்கள் தேவைப்படுதோ அதே விஷயங்கள் பெண்களுக்கும் தேவைப்படுகிறது. ஜோதிகாவுக்கு பொருளாதார சுதந்திரம், மரியாதை, நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் தேவை. அவருக்கு என்னென்ன விஷயங்கள் தேவைபடுகிறதோ அதையெல்லாம் செய்து முடிக்க எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. நடிகராகவும் அவருடைய வளர்ச்சியை எண்ணி சந்தோஷப்படுகிறேன். இப்போது மாதத்தில் 10 நாட்கள் மும்பையில் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கிறேன். மீதமுள்ள 20 நாட்களில் நான் 20 மணி நேரம்கூட வேலை பார்க்கத் தயார். ஆனால், அந்த பத்து நாட்கள் அலுவலகத்திற்குச் செல்லாமல் என்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பேன். எனது குழந்தைகளுடன் வெளியே செல்வேன். என் மகனை கூடைப்பந்து விளையாட அழைத்துச்செல்வேன்.”எனக் கூறியிருக்கிறார்.
இதுமட்டுமின்றி தயாரிப்பாளாராக `மெய்யழகன்’ திரைப்படத்தின் வெற்றி நிலவரம் குறித்தும் பேசினார் சூர்யா.அவர், ” மெய்யழகன் திரைப்படத்தை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து உரையாட வேண்டிய அவசியமே இல்லை.
25 சதவிகிதத்திற்கும் மேலாக எனக்கு அத்திரைப்படத்தின் மூலம் லாபம் கிடைத்தது. மெய்யழகன் திரைப்படம் எனக்கு சமகால இலக்கியத்தைப் போன்றது. இன்றைய தேதியில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள். அவர்கள் எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை மெய்யழகன் பதிவு செய்தது. அதை போல வேறு எந்த திரைப்படமும் டாக்குமென்ட் செய்ததில்லை. அதனால்தான் மெய்யழகன் மிகவும் முக்கியமான திரைப்படம். ” எனக் கூறி முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…