தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது `அமரன்’.
சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக படத்தில் களமிறங்கியிருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. புரோமோஷன் பணிகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது படக்குழு. இன்று (அக்டோபர் 29) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கலந்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “சிவகார்த்திகேயனும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்காரு. அவருக்கு ஒரு அட்டவணை இருக்கு. அதுமட்டுமல்ல ஏ.ஆர். முருகதாஸ் சாரோட படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கார். இப்படியான இறுக்கமான நேரங்களிலும் வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் ப்ரோமோஷனுக்கு போனாரு. இன்னைக்குக்கூட கோயம்புத்தூர்ல ஒரு புரோமோஷன் நிகழ்வுல கலந்துக்கதான் போயிருக்கார். டிரைலர்ல முதல்ல நீங்க பார்க்கிற முகுந்த் வரதராஜனுடைய காணொளியைதான் நானும் முதல்ல பார்த்தேன்.
அவர் இறந்துட்டார்னு செய்தி வந்ததும் அவரைப் பற்றி பார்க்கிறதுக்கு இந்த காணொளிதான் இருந்தது. அந்த வீடியோவுல தன்னுடைய மூணு வயது குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயத்தை அவர் சொல்லிக் கொடுத்தது எனக்கு ரொம்பவே முக்கியமாகத் தெரிஞ்சது. அதுமட்டுமில்லாமல், முகுந்த் வரதராஜனுடைய கதாபாத்திரம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அதன் பிறகு சோனி நிறுவனம் மூலமாக இத்திரைப்படத்தை இயக்குறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. அதன் பிறகு கமல் சாரும் தயாரிப்புக்குள் வந்தார்.
முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்துக்கு நடிகர்களுக்கான தேடல்ல இருக்கும்போது எல்லோருக்கும் சிவகார்த்திகேயன் பெயர்தான் நியாபகத்திற்கு வந்தது. இறுதி வேலைகளையெல்லாம் முடிச்சிட்டு படத்தை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது சிவகார்த்திகேயன்தான் சரியான தேர்வுனு எனக்கு தோணுச்சு. படத்தினுடைய ஸ்கிரிப்டை அனுமதி பெற வேண்டிய ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி அனுமதி பெற்றோம். படத்தினுடைய வேலைகள் முழுமையாக முடிஞ்சதுக்குப் பிறகு அந்த அதிகாரிகளுக்குப் படத்தை காமிச்சோம். பிறகு அக்டோபர் 23-ம் தேதி டெல்லியில ராணுவ வீரர்களுக்குப் படத்தை திரையிட்டோம்.
என்னுடைய பிறந்தநாளான அக்டோபர் 22-ம் தேதி முகுந்த் வரதராஜனுடைய குடும்பம் இந்த படத்தை பார்த்தாங்க. கமல் சார் படத்தை பார்த்ததும்தான் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிடலாம்னு சொன்னார். அவரும் படம் பார்த்துட்டு பாராட்டினார். அவர் என்னென்ன விஷயங்கள் சொன்னார் என்பதை படம் ரிலீஸுக்குப் பிறகு சொன்னால் ரொம்பவே சரியாக இருக்கும். இந்த படத்துக்கு `அமரன்’ என்கிற தலைப்பு சரியானதாக இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அந்த சொல்லுக்கு மரணமில்லாதவன்னு பொருள்.
டெல்லியில அமர் ஜவான் ஜோதினு ஒரு இடம் இருக்கு. மறைந்த ராணுவ வீரர்கள் நினைவாக அங்க விளக்கு ஏத்துறாங்க. `அமர் ஜவான்’ என்றால் மறைந்த வீரன் என்று பொருள். அதுதான் சரியான தலைப்பு என தோன்றிய பிறகு பழைய படங்களின் தலைப்பைப் புதிய படத்தில் வைக்கிறதுக்குச் சில விஷயங்கள் இருக்கு. அதையெல்லாம் பின்பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைப்பை வாங்கினோம்.” எனப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…