புதுடெல்லி: ரஷ்யாவின் காஸன் நகரில் கடந்த 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, புதின் உட்பட உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பல அரிய பொருட்களை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய வெளியு றவுத் துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: பிரிக்ஸ் மாநாட்டின் போது ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுக்கு, கடல் சிப்பிகளால் செய்யப்பட்ட பூக்கள் வைக்கும் குவளையை (மதர் ஆப் பியர்ல்) பிரதமர் மோடி பரிசளித்தார். இந்த பூக்குவளை மகாராஷ்டிர மாநில கடலோர மக்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்படுகின்றன. இதில் மகாராஷ்டிர மக்களின் கலைத்திறன் மற்றும் பாரம்பரியம் வெளிப்படும் வகையில் குவளை வடிவமைக்கப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாரம்பரிய சோராய் ஓவியத்தை பரிசளித்தார். இந்த வகை ஓவியங்கள் மிகவும் நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் தீட்டப்படுகின்றன. வைக்கோல் அல்லது விரல்களையே தூரிகையாகக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன.
இந்த ஓவியங்களில் வழக்கமாக விலங்குகள், பறவைகள், இயற்கை காட்சிகள் என ஒரு விவசாயியின் வாழ்க்கையை விளக்கும் காட்சிகள் இடம்பெறும். மேலும், ஜார்க்கண்ட் உள்ளூர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை பற்றிய காட்சிகளும் அந்த ஓவியங்களில் இடம்பெற்றிருக்கும். அந்த வகை அரிய ஓவியத்தை அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோவுக்கு மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த வார்லி ஓவியத்தை பரிசளித்தார். வார்லி பழங்குடியின மக்களிடம் இருந்து இந்த வகை ஓவியம் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்த வகை ஓவியங்கள் 5,000 ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறப்படுகிறது. இந்தவகை ஓவியங்களிலும் இயற்கைகாட்சிகள், விழாக்கள், சமூக செயல்பாடுகள் போன்ற காட்சிகள் இடம்பெறும். இந்த வகை ஓவியங்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.