திருவனந்தபுரம்: அரிய வகை நோயான முதுகெலும்பு தசைச் சிதைவு (எஸ்எம்ஏ) பிரச்சினைக்கு தரப்படும் ரூ.72 லட்சம் மதிப்பிலான மருந்தை உள்ளூர் தயாரிப்பின் மூலமாக ரூ.3,000-க்கு தரலாம் என கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 24 வயது நபர் எஸ்எம்ஏ எனப்படும் முதுகெலும்பு தசைச் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரைப் போன்று அரிய வகை நோயால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிடும் விதமாக 2023 மே மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தேசிய அரிதான நோய்களுக்கான குழு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த குழு அரிதான நோய்களுக்கு மலிவு விலை மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிக்க உகந்த சூழலை உருவாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து இதுவரை விவரங்கள் எதுவும் இல்லை எனக் கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் அரிய வகை நோயால் பாதிப்புக்குள்ளான 24 வயது நபர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கடந்த செப்., மாதம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தது. ஆனால், உள்நாட்டு உற்பத்தியை சாத்தியமாக்காதவரை நோயாளிகளின் மருத்துவ செலவுக்கு இந்த தொகை போதுமானதாக இருக்காது என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைச் செலவுகளுக்கு நன்கொடையாளர்கள் பங்களிப்பதை எளிதாக்குவதற்காக, கிரவுட் ஃபண்டிங்கிற்கான டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. அக்டோபர் 14-ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2,340 ஆக உள்ளது. ஆனால், டிஜிட்டல் பிளாட்பார்ம் மூலம் வெறும் ரூ.3.5 லட்ச ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டதாக மனுதாரரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், யேல் பல்கலைக்கழக்கத்தில் பணியாற்றி வரும் மெலிசா பார்பர் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகருமாக உள்ளார். அவரின் கூற்றை சுற்றிக்காட்டி மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: காப்புரிமை பாதுகாப்பு மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளிட்ட காரணங்களால் முதுகெலும்பு தசைச் சிதைவு நோயாளிக்கு ஓராண்டுக்கு ஆகும் மருந்து செலவு என்பது ரூ.72 லட்சமாக உள்ளது. இந்தியா உள்ளூர் மருந்து தயாரிப்புக்கான அனுமதியை அளிக்கும்பட்சத்தில் இந்த நோய்க்கான மருத்துவ செலவு என்பது ஆண்டுக்கு வெறும் ரூ.3,000-மாக குறையும் என்பது மருந்துக்கான செலவு பகுப்பாய்வு நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே, அரிதான நோய்களுக்கான மருந்து உற்பத்தியை உடனடியாக உள்நாட்டில் தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.