Doctor Vikatan: மாதவிலக்கு நாள்களில் ஏற்படும் அந்தரங்க உறுப்பு அலர்ஜி… தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 28. எனக்கு பீரியட்ஸ் நாள்களில் நாப்கின் உபயோகிப்பதால் அந்தரங்க உறுப்பைச் சுற்றிலும் அரிப்பு, எரிச்சல் ஏற்படுகிறது. வேலைக்குச் செல்லும் நிலையில் இது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து மீள ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லவும்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் செல்வி ராஜேந்திரன்

செல்வி ராஜேந்திரன்

பீரியட்ஸ் நாள்களில் ஏற்படும் இந்த வகை அலர்ஜிக்கு கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் (Contact Dermatitis) என்று பெயர். நீங்கள் உபயோகிக்கும் நாப்கின் உங்கள் அந்தரங்க உறுப்பு சருமத்தில் படுவதால் இந்த அலர்ஜி ஏற்படும்.

நாப்கினில் உள்ள பசை, பெர்ஃபியூம், மேல் லேயரில் உள்ள பாலிஓலிஃபின்  (Polyolefin) எனப்படும் கெமிக்கல் போன்றவை சருமத்தை உறுத்தி, அதன் விளைவாக அரிப்பு ஏற்படலாம். தவிர பீரியட்ஸ் நாள்களில் அந்தரங்க உறுப்பைச் சுற்றி சூடு, ஈரப்பதம் போன்றவை இருக்கும். அதனால் அதிகம் வியர்க்கும். நம் உடலில் இயல்பிலேயே பாக்டீரியா கிருமிகள் இருக்கும்.

பீரியட்ஸ் நாள்களில் அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள ஈரப்பதம் மற்றும் சூட்டின் காரணமாக அந்த பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கும். அந்த நாள்களில் நாப்கின் வைத்துக்கொண்டு நடக்கும்போது அது தொடைகளில் உராய்ந்து அதன் விளைவாகவும் அரிப்பை உண்டுபண்ணலாம். அந்தப் பகுதியில் உள்ள சருமம் ஏற்கெனவே ரொம்பவும் சென்சிட்டிவ்வாக இருக்கும். இந்தப் பிரச்னையும் சேரும்போது, அதை கவனிக்காமல் விட்டால் அரிப்புடன் வீக்கம், சருமம் சிவந்து தடித்துப்போவது போன்றவையும் சேர்ந்துகொள்ளலாம். 

menstrual cup

நீங்கள்  உபயோகிக்கும் நாப்கின் தரமானதா என்று பாருங்கள்.   அதில் வாசனை, பசை போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தளர்வான, காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டியது முக்கியம். ப்ளீடிங் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்ற வேண்டும். அரிப்பின் தீவிரம் அதிகமாக இருந்தால், சரும மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்கள் பிரச்னையைப் பார்த்துவிட்டு அதற்கேற்ப, மாத்திரைகள், ஆயின்மென்ட் போன்றவற்றைப் பரிந்துரைப்பார்.

ஒருவேளை உங்களுக்கு நாப்கின் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், மென்ஸ்டுரல் கப் உபயோகிக்கவும் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.