தீபாவளி கொண்டாட்டங்களில் பட்டாசுளுக்கு முக்கிய இடம் உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பட்டாசு வெடிப்பதென்றால் தனி பரசவம்தான். பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிக்க வேண்டியதும் அவசியம்.
பட்டாசு வெடிப்பதால் கண்களில் தீக்காயம், எரிச்சல் எனச் சிறிய காயங்கள் தொடங்கி, பார்வை இழப்பை ஏற்படுத்தும் அளவுக்குப் பெரிய காயங்களும் ஏற்படலாம்.
தரமான பட்டாசுகளை மட்டுமே வாங்கி வெடிக்க வேண்டும். அதிகம் புகை வரும் பட்டாசுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
பட்டாசுகளைக் கையில் வைத்து வெடிப்பது, கொளுத்திய பட்டாசை மற்றவர் மேல் தூக்கி வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடவே கூடாது.
அதிக ஆற்றல் மற்றும் சத்தம் கொண்ட ஆட்டம்பாம், உயரத்தில் எரியும் புஸ்வாணம் ஆகியவற்றால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இத்தகைய பட்டாசுகளை, குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில்தான் வெடிக்க வேண்டும்.
நீளமான ஊதுவத்தியை வைத்து பட்டாசுகளைப் பற்ற வைக்க வேண்டும். முகம் மற்றும் உடலைப் பட்டாசின் அருகே கொண்டுசெல்லாமல் தூரமாக நின்றுகொண்டு, கைகளை மட்டுமே நீட்டிப் பற்ற வைக்க வேண்டும்.
திரியைப் பற்ற வைத்தவுடன் பட்டாசு வெடிக்காவிட்டால் முகத்தை அருகில் கொண்டுசென்று அதைப் பரிசோதிக்கக்கூடாது. அதன் மீது தண்ணீரையோ மண்ணையோ போட்டு அணைத்துவிட வேண்டும்.
பட்டாசு விபத்து ஏற்பட்டு உடலில் எந்த இடத்தில் காயம் ஏற்பட்டாலும் ஓடும் தண்ணீரால் முதலில் நன்கு கழுவ வேண்டும். தண்ணீரே காயங்களில் இருக்கும் ரசாயனங்களைப் போக்கிவிடும்.
பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால் கண்களை எந்தக் காரணம் கொண்டும் கசக்கக்கூடாது. குளிர்ந்த நீரில் கண்களை 10 முதல் 15 நிமிடங்கள் கழுவ வேண்டும். பின்னர் சுத்தமான பஞ்சை வைத்து கண்களை மூடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
விழிவெண்படலம், கருவிழி ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்படுவது, கண் இமைகள் பொசுங்கிவிடுவது போன்ற பெரிய காயங்கள் ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சையைத் தாமதிக்கும்பட்சத்தில் பார்வை இழப்பு ஏற்படலாம்.
காயம்பட்டவுடன் கண்களில் மருந்து ஊற்றுவது, களிம்பு தடவுவது போன்ற எந்தச் சுய மருத்துவத்திலும் ஈடுபடக்கூடாது. இது காயத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும்.
கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் பட்டாசு வெடிக்கும்போது கண்ணாடி அணியலாம். இல்லையென்றால், பட்டாசு வெடிப்பதால் புகை மற்றும் சிறு துகள்கள் கண்களுக்குள் சென்று எரிச்சலை ஏற்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…