மின் கட்டணத்தை குறைக்க புதிய வேலைத்திட்டம்
-இலங்கை வணிகச் சபை பிரிதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
எந்தவொரு கொடுப்பனவு மற்றும் சம்பளத்தையும் பெறாமல் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவத் தயாரென வணிகச் சபை பிரதிநிதிகள் தெரிவிப்பு
எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காக டிஜிட்டல் மயமாக்கலுக்கு அவசியமான தலையீட்டினை அரசாங்கம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வணிகச் சபை பிரதிநிதிகளுடன் நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைச் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு கொடுப்பனவு மற்றும் சம்பளத்தையும் பெறாமல் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவவும் வணிகச் சபையின் பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.
காப்புறுதி,வங்கி,நிர்மாணம், சுற்றுலா,பெருந்தோட்ட தொழில்துறை, சிறு மற்றும் மத்திய தர வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளின் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து இதன் போது தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி அதற்கு இணையாக நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வலுசக்தி சுயாதிகாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், புதிய மின்சார சட்டத்தை தயாரிக்கும் போது, வலுசக்தி சுயாதிகாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
செயற்திறனின்மை மற்றும் ஊழியர்கள் முகாமைத்துவம் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்க இருப்பதாகவும் செயற்திறன் மிகுந்த பொதுச் சேவையை முன்னெடுப்பதற்கு மின்சார சபைக்கு தேவையான மாற்றங்களை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாசநாயக்க தெரிவித்தார்.
அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஏற்றுமதி துறையை பலப்படுத்தல் மற்றும் சர்வதேச புதிய சந்தை வாய்ப்புக்களை தேடிக்கொள்வது தூதரக சேவையின் முக்கிய பணி என்ற வகையில் அதற்கான இயலுமைகளை கொண்டிருக்கும் திறமையானவர்களை தூதரக சேவைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தேசிய வணிகச் சபையின் தலைவரும் GSH சிட்டி ஹோட்டலின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான தீபால் நெல்சன், தேசிய வணிகச் சபையின் செயலாளரும் ரீஜன் ரினீவர்பல்ஸ் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான வைத்தியர் லக்மால் பெர்னாண்டோ,வரையறுக்கப்பட்ட செலின்கோ ஜெனரல் காப்புறுதி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பெட்ரிக் அல்விஸ், பேன் ஏசியா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளீன் எதிரிசிங்க உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.