புதுடெல்லி: டெல்லி நகர நிர்வாகத்தின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்தில் வழங்கப்படும் பிங்க் பயணச்சீட்டு எண்ணிக்கை நூறு கோடி என்ற மைல் கல் சாதனையை எட்டியிருக்கும் நிலையில், 77 சதவீதம் பெண்கள் டெல்லியில் இரவு நேரப் பயணம் பாதுகாப்பானதாக இல்லை என உணர்வதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுசாரா நிறுவனமான ‘க்ரீன்பீஸ்’ இந்தியாவின் சமீபத்திய அறிக்கையான ‘ரைடிங் தி ஜஸ்டிஸ் ரூட்’ -ல் கூறியிருப்பதாவது: இதற்காக ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பெண்களில் 75 சதவீதம் பேர் பிங்க் டிக்கெட் திட்டத்தின் மூலம் சேமிக்கும் பணத்தினை வீட்டுச்செலவுகள் அவசர மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். அதேபோல் ஆய்வுக்கு எடுகத்துக் கொண்ட பெண்களில் 25 சதவீதம் பேர், புதிதாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த 2019-ம் ஆண்டு இந்தத் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பொதுப்போக்குவரத்தை தவிர்த்து வந்தனர்
இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் பேருந்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் தொடரவே செய்கின்றன. 77 சதவீத பெண்கள் இருட்டிய பின்பு பேருந்து பயணம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவே உணர்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். போதிய வெளிச்சம் இல்லாதது, அடிக்கடி பேருந்து வசதிகள் இல்லாதது போன்றவைகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பல பெண்கள் அத்துமீறல் பிரச்சினைகள், குறிப்பாக கூட்டமான பேருந்துகளில் அப்பிரச்சினை அதிகமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிங்க் டிக்கெட் திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் தங்களின் பயணத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால் அவர்கள் விரும்பினால் பயணச்சீட்டு வாங்கிக் கொள்ளலாம்.
க்ரீன்பீஸ் இந்தியாவின் ஆகிஷ் ஃபரூக் கூறுகையில், “இந்தத் திட்டம் பெண்களுக்கு டெல்லியின் பொதுப் போக்குவரத்து பயணத்தை எளிமையாக்கியுள்ளது. ஆனால் இதை நாம் முழுமையான மாற்றமாக ஆக்குவதற்கு பாதுகாப்பினை மேம்படுத்த வேண்டும். எல்லோருக்கும் பொதுப்போக்குவரத்து எளிதாக கிடைக்கும் வகையில் அனைத்து இணைக்கப்பட்ட சேவைகளை உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
க்ரீன்பீஸ் இந்தியாவின் அறிக்கை, “சுமார் 100 கோடி என்ற மைல் கல் சாதனையை எட்டியிருக்கும் பிங்க் டிக்கெட் திட்டம், பெண்களுக்கு பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை அளித்திருப்பதோடு, தனியார் வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்து பயன்பாட்டு அதிகரித்திருப்பதால் பச்சை இல்ல வாயு வெளியீட்டை குறைத்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பாதுகாப்பான மற்றும் நிலையான நகரங்களை உருவாக்க உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நாடு முழுவதும் இலவச பொது போக்குவரத்து திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.