மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: சொந்த ஊரைத் தக்க வைக்கப் போராடும் தாக்கரே சகோதரர்கள்; நிலவரம் என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.

நான்கு கட்சிகள் அதாவது இரண்டு சிவசேனா, இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களது எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தலாக இது அமைந்திருக்கிறது. மும்பையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே ஒர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அருகில் உள்ள மாகிம் தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ்தாக்கரேயிடைய மகன் அமித் தாக்கரே போட்டியிடுகிறார்.

பா.ஜ.க முயற்சி

இத்தொகுதியில் அமித் தாக்கரேயிக்கு எதிராக சிவசேனா (ஷிண்டே) எம்.எல்.ஏ. சதா சர்வான்கர் போட்டியிடுகிறார். அவரைப் போட்டியில் விலக்க வைக்க பா.ஜ.கவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. உத்தவ் தாக்கரேயும் தனது கட்சி சார்பாக மகேஷ் சாவந்த் என்பவரை இத்தொகுதியில் நிறுத்தி இருக்கிறார்.

சதா சர்வான்கர்

இதனால் இத்தேர்தலில் மும்முனைப்போட்டி ஏற்பட்டு இருக்கிறது. மாகிம் தொகுதியில்தான் ராஜ்தாக்கரேயின் வீடு இருக்கிறது. இத்தொகுதியில் வெற்றி பெறவேண்டும் என்பதில் அமித் தாக்கரே தீவிரமாக இருக்கிறார். இதற்கு பா.ஜ.கவும் ஆதரவு கொடுத்து இருக்கிறது. எனவே வரும் 4ம் தேதிக்குள் சதா சர்வான்கரை போட்டியிலிருந்து திரும்பப்பெறவைக்க ஏக்நாத் ஷிண்டே முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் சதா சர்வான்கர் போட்டியிலிருந்து விலக மறுத்து வருகிறார். அவரைப் போட்டியிலிருந்து விலக வைக்க நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரே

ஆதித்ய தாக்கரேயிக்கு எதிராக ராஜ்தாக்கரேயும் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார். ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேயிக்கு எதிராக ராஜ்தாக்கரே நிறுத்தி இருக்கும் தேஷ்பாண்டே தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றால் மாகிம் தொகுதியில் உத்தவ் தாக்கரே தனது வேட்பாளரை வாபஸ் பெற வாய்ப்பு இருக்கிறது.

இதே போன்று மும்பையில் உத்தவ் தாக்கரேயின் இல்லம் இருக்கும் பாந்த்ரா கிழக்குத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள உத்தவ் தாக்கரே போராடி வருகிறார். இத்தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் உறவினர் வருண் சர்தேசாய் சிவசேனா (உத்தவ்) சார்பாகப் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாகக் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற சீசன் சித்திக் இப்போது அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். அவர் இப்போது அஜித்பவார் கட்சி சார்பாக பாந்த்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

சிவசேனா கோட்டை

இதே போன்று நவநிர்மாண் சேனா சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ. திருப்தி சாவந்த் பாந்த்ரா கிழக்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு முன்பு இத்தொகுதி சிவசேனாவின் கோட்டையாக இருந்தது.

வருண் சர்தேசாய்

2019ம் ஆண்டு தேர்தலில் உத்தவ் தாக்கரே இத்தொகுதியில் முன்னாள் மேயர் விஷ்வநாத் மகாதேஷ்வர் என்பவரை நிறுத்தினார். திருப்தி சாவந்த் சுயேச்சையாகப் போட்டியிட்டதால் வாக்குகள் சிதறியது. இதில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட சீசன் சித்திக் வெற்றி பெற்றார். சீசன் சித்திக் இப்போது அஜித்பவார் கட்சியில் சேர்ந்துவிட்டதால் அத்தொகுதியை காங்கிரஸ் கட்சி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்குக் கொடுத்துவிட்டது. எனவே பாந்த்ரா கிழக்குத் தொகுதியில் உத்தவ் தாக்கரே தனது உறவினர் வருண் சர்தேசாயை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

வருண் சர்தேசாய் மக்களவைத் தேர்தலில் உத்தவ் தாக்கரே கட்சிக்காகத் தீவிரமாக வேலை செய்தார். ஆனால் இத்தொகுதியில் முஸ்லிம் வாக்குகள் கணிசமாக இருக்கிறது.

பாபா சித்திக் படுகொலை

இம்மாத தொடக்கத்தில் பாந்த்ரா கிழக்குப் பகுதியில் சீசன் சித்திக் தந்தை பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார். இதனால் சீசன் சித்திக்கிற்கு மக்கள் மத்தியில் அனுதாபம் இருக்கிறது. இதனால் பாந்த்ரா தொகுதியில் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. சொந்த வீடு இருக்கும் பாந்த்ரா கிழக்குத் தொகுதியை உத்தவ் தாக்கரேயும், மாகிம் தொகுதியைத் தக்கவைக்க ராஜ்தாக்கரேயும் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இதில் இரு கட்சிகளும் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.