புதுடெல்லி: லடாக்கின் டெப்சாங், டெம்சோக் ஆகிய 2 பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த படைகளை, விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை முடிவடைந்துவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பேட்ரோல் பாய்ண்ட் 14ல் இந்திய – சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். சீன தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். எனினும், அது குறித்த தகவலை அந்த நாடு மறைத்துவிட்டது. இந்த மோதலை அடுத்து, போருக்கு தயாராகும் நோக்கில் இந்தியா தனது ராணுவத்தை அங்கே குவித்தது. பதிலுக்கு சீனாவும் தனது ராணுவத்தை குவித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை காரணமாக போர் பதற்றம் தணிக்கப்பட்டது. என்றாலும், படைகள் அதே இடத்தில் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டது.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, லடாக்கின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்வது என கடந்த 21-ம் தேதி இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. மேலும், ரோந்துப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், படைகளை விலக்கிக் கொள்ளும் பணி கடந்த 25ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், “கிழக்கு லடாக்கில் இந்தியா – சீனா இடையே படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை இன்று முடிவடைந்தது. இரு தரப்பும் ஒருங்கிணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். தீபாவளியை முன்னிட்டு இனிப்பு பரிமாறிக்கொள்ளும் நிகழ்வு நாளை நடைபெறும்” என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, “எல்லை விவகாரங்களில் பரஸ்பர உடன்பாட்டைத் தொடர்ந்து இரு தரப்பிலிருந்தும் எல்லைப் படையினர் படைகளை திரும்பப் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயல்முறை சுமூகமாக முன்னேறி வருகிறது” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்திருந்தார்.