கோவை – திண்டுக்கல் சிறப்பு ரயிலில் 100-க்கும் குறைவானவர்கள் பயணம்: கடைசி நேர அறிவிப்பால் அவலம்

கோவை: கோவை – திண்டுக்கல் இடையிலான சிறப்பு ரயில் சேவையை கடைசி நேரத்தில் அறிவித்ததால் பெரும்பாலான மக்களுக்கு இந்த ரயில் இயக்கம் குறித்து தெரியவில்லை. இதனால் 2,000-க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் ரயிலில் 100-க்கும் குறைவானவர்களே கோவையிலிருந்து பயணித்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து அனைத்து வழித்தடங்களிலும் ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவையில் இருந்து மதுரைக்கு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் கோவை – திண்டுக்கல் இடையே தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக நேற்று (அக்.29) மாலைக்கு மேல் ரயில் நிர்வாகம் அறிவித்தது. அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை (ஞாயிறு தவிர்த்து) கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் காலை 9.35 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் வழியாக மதியம் 1.10 மணிக்கு திண்டுக்கல்லைச் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திண்டுக்கலில் இருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு கோவையை வந்தடைகிறது. நவம்பர் 3-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) மட்டும் சிறப்ப ரயில் இயங்காது.

இந்த ரயில் சேவையானது தேவையான ஒன்றுதான் என்றாலும் முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமல் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதால், இன்று (அக்.30) காலை புறப்பட்ட ரயிலில் நூறுக்கும் குறைவான பயணிகளே கோவையிலிருந்து புறப்பட்டனர். அதேசமயம், கோவையிலிருந்து இன்று மதியம் புறப்பட்ட மதுரை ரயிலில் நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது: “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை, பொள்ளாச்சி, பழநியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் பேருந்து நிலையங்களில் மணிக் கணக்கில் குழந்தைகள், முதியவர்களுடன் பல மணி நேரம் காத்திருந்து பேருந்துகளில் செல்கின்றனர். கோவை – திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இருப்பினும் இதுகுறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் முதல் நாளான இன்று (அக்.30) கோவையில் இருந்து புறப்பட்ட ரயிலில் 100-க்கும் குறைவானவர்களே பயணம் மேற்கொண்டுள்ளனர். மறுபுறம் இன்று மதியம் 2.30 மணியளவில் கோவையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ரயிலில் நிற்பதற்கு கூட இடமில்லை. இதே போல் சென்னை – கோவை இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் பெரும்பாலான மக்கள் பயன்பெற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகைகளுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்,” என்று அவர்கள் கூறினா்.

சென்னை – கோவை இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: சென்னை சென்ட்ரல் – கோவை (போத்தனூர்) இடையே முன்பதிவு இல்லாத 18 ரயில் பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் இன்று (அக்.30) இரவு 10.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நாளை காலை 7 மணிக்கு கோவை – போத்தனூர் செல்கிறது. அதே ரயில் நவம்பர் 3-ம் தேதி (ஞாயிற்றுகிழமை) காலை 7.45 மணிக்கு கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.