புதுச்சேரி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதுச்சேரியில் வெளியான பொதுப்பணித்துறை தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, புதிய முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இளநிலைப்பொறியாளர் பதவிக்கு 99 பேரும், ஓவர்சீர் பதவிக்கு 69 பேரும் என 168 பேர் தேர்வாகியுள்ளனர்.
புதுச்சேரி பொதுப்பணித் துறையில் இளநிலை பொறியாளர் – 99, ஓவர்சீர் – 69 என மொத்தம் 168 பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு கடந்த 27ம் தேதி நடந்தது. தேர்வு இரண்டு தாள்களை கொண்டிருந்தது. தாள் 1-ல் 98 மதிப்பெண்கள், தாள் 2-ல் 96 மதிப்பெண்கள் என மொத்தமாக 194 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த வகையில், குறைந்த பட்ச மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினர் 30 சதவீதம் என்ற வகையில் 194-க்கு 58.20 மதிப்பெண்ணும், எம்பிசி, ஓபிசி, இடபிள்யூஎஸ், இபிசி, பிசிஎம்-25 சதவீதம் என்ற வகையில் 48.50 மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் 20 சதவீதம் என்ற வகையில் 38.80 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். இதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதில் இளநிலைப்பொறியாளர் பணிக்கு 26 பேரும், ஓவர்சீர் பதவிக்கு யாரும் தேர்வாகவில்லை என தெரிவிக்கப்பட்டதால் தேர்வு எழுதியோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த முடிவுகள் தொழில்நுட்பக்கோளாறால் தவறாக வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டு புதிய முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன. முதல் தாளில் இரு கேள்விகளும், 2ம் தாளில் நான்கு கேள்விகளும் தவறான விடை காரணமாக ரத்தானது. அதில் பொதுப்பிரிவினர் 30 சதவீதம் என்ற வகையில் 194 க்கு 28.95 மதிப்பெண்ணும், எம்பிசி, ஓபிசி, இடபிள்யூஎஸ், இபிசி, பிசிஎம் – 25 சதவீதம் என்ற வகையில் 24.12 மதிப்பெண்ணும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் 20 சதவீதம் என்ற வகையில் 19.30 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
இதில் பொதுப்பிரிவு- 50, எம்பிசி-17, ஒபிசி-10. எஸ்சி-15, எஸ்டி 1, பிசிஎம் 2, இபிசி-2, இடபுள்யூஎஸ் 2 என 99 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் இளநிலை பொறியாளர் (சிவில்) பதவிக்கு 26 , பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரதீப்கு மார் 62.19 மதிப்பெண் பெற்று முதலிடத்தை யும். பிரியதர்ஷினி 60.56 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும். பிரதீப் 60.07 மதிப்பெண் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஓவர்சீர் பதவிகளுக்கு பொதுப்பிரிவு 36 பேரும், எம்பிசி 12, ஓபிசி 7, எஸ்சி 11, பிசிஎம், இபிசி, இடபுள்யூஎஸ் தலா 1 என 69 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். ஓவர்சீர் பதவியில் தினேஷ் 42.19 மதிப்பெண்களுடன் முதலிடமும், பிரேம்குமார் 40.82 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். காத்திருப்போர் பட்டியலும் வெளியிடப்பட்டது. தேர்வானோர் வராவிட்டால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளோருக்கு வாய்ப்பு கிடைக்கும். தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான அட்டவணை பொதுப்பணித்துறை மூலம் தெரிவிக்கப்படும். இந்த தகவலை அரசு செயலரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.