புதுடெல்லி,
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பது பின்னர் தெரியவந்தது. அதாவது 60-க்கும் மேற்பட்டவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், 1,500-க்கு மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சக தேர்வர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நுழைவுத்தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் நடத்துவதற்கான பரிந்துரைகளை அளிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. . இந்த குழு நீண்ட ஆய்வு நடத்தி தனது பரிந்துரைகளை மத்திய கல்வி அமைச்சகத்திடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. அந்த பரிந்துரையில்,
நீட் நுழைவுத்தேர்வை முடிந்தவரை ஆன்லைன் மூலம் நடத்தலாம்.நீட் தேர்வு மையங்களை அவுட்சோர்சிங் என்ற முறையில் வழங்காமல் அதன் சொந்த தேர்வு மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்து நடத்தலாம். ஆன்லைன் முறை சாத்தியம் இல்லை எனும் போது, வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் தேர்வர்களுக்கு அனுப்பலாம். எத்தனை முறை தேர்வில் பங்கேற்பது என்ற கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்.” உள்ளிட்டவை இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.