சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான தாக்குதல்: அமித் ஷா மீது கனடா குற்றச்சாட்டு

கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையுடன் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என்று கனடா ஆரம்பம் முதலே குற்றம் சாட்டுகிறது.

இந்தியாவுக்கு எதிரான நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். அதற்கான ஆதாரங்களை இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக கனடா அதிகாரிகள் பலமுறை கூறினர். ஆனால் இந்திய அதிகாரிகள் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் கடுமையான விரிசலை ஏற்படுத்தியது.

இந்திய தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வழக்கில் கனடாவில் வசிக்கும் 4 இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

இந்நிலையில், கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்துறை தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு இந்திய உள்துறை மந்திரி அமித் ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை மந்திரி டேவிட் மோரிசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

அமித் ஷாவின் தொடர்பு பற்றி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் உறுதி செய்த தகவலை, நாட்டின் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்களிடம் (எம்.பி.க்கள்) மோரிசன் கூறியிருக்கிறார்.

‘வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் என்னிடம், அந்த நபர்தானா(அமித் ஷா) என்று கேட்டார். ஆமாம் அவர்தான் என்பதை நான் உறுதி செய்தேன்’ என மோரிசன் தெரிவித்தார்.

ஆனால் அமித் ஷாவின் தொடர்பு பற்றி கனடாவுக்கு எப்படி தெரியவந்தது? என்ற விவரத்தை மோரிசன் தெரிவிக்கவில்லை.

இதேபோல், வெளிநாட்டு மண்ணில் படுகொலைக்கான சதித்திட்டம் தீட்டியதாக இந்திய அதிகாரிகள் மீது அமெரிக்காவும் குற்றம்சாட்டியது. அதாவது, நியூயார்க் நகரில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாத தலைவரைக் கொல்லும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில், இந்திய அரசு மீது சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியது. அமெரிக்க நீதித்துறையால் அறிவிக்கப்பட்ட இந்த வழக்கில், இந்தியாவில் இருந்து நியூயார்க்கில் கொலை திட்டத்தை செயல்படுத்த கூலிப்படையை நியமித்ததாக இந்திய முன்னாள் உளவுத்துறை அதிகாரி விகாஸ் யாதவ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.