Amaran : தேசம் காத்து உயிர்விட்ட `ரியல் அமரன்' – மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமிக்க கதை!

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கிறது அமரன் திரைப்படம். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையே இந்தத் திரைப்படம்.

“பெருங்காதலும், ஒப்பில்லா வீரமும், தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று அவரைப் புகழ்ந்துள்ளார் நடிகர் சிவகார்திகேயன்.

‘அமரன்’ என்றால் அழிவில்லாதவன் என்று பொருள். இந்த தலைப்புக்கு முற்றிலும் பொருத்தமான முகுந்த் வரதராஜனின் வீரமிக்க கதையை தெரிந்துகொள்லலாம்.

முகுந்த் வரதராஜன்

தாம்பரத்தில் 1983ம் ஆண்டு வரதராஜன் – கீதா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் முகுந்த். இவருக்கு நித்யா – ஸ்வேதா என இரண்டு சகோதரிகள்.

முகுந்த்  ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் வணிகவியல் இளங்கலைப் பட்டமும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் இதழியல் டிப்ளோமாவும் பெற்றார்.

முகுந்தின் குடும்பம் ராணுவ பின்னணி கொண்டது. அவரது தாத்தா மற்றும் நெருங்கிய உறவினர்கள் ராணுவத்தில் இருந்துள்ளனர். இதுவே அவர் தன்னை நாட்டுக்காக அர்ப்பணிக்க உந்துதலாக இருந்திருக்கிறது.

மார்ச் 18, 2006 அன்று, ஷார்ட் செர்விங் கமிஷன்(SSC) அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நிறுவனத்தில் பட்டம் பெற்றார். பின்னர், பழமையான இந்திய படைப்பிரிவுகளில் ஒன்றான ‘ராஜ்புத் ரெஜிமென்ட்டில்’ லெப்டினன்ட் ஆனார். ஏழே மாதங்களில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.

நீண்டநாள் காதலித்து வந்த இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற பெண்ணை 2009ம் ஆண்டு கரம் பிடித்தார். இவர்களுக்கு 2011ம் ஆண்டில் அர்ஷியா என்ற பெண் குழந்தை பிறந்தது.

லெபனானில் ஐக்கிய நாடுகளின் அமைதி காத்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அக்டோபர் 18, 2012ம் ஆண்டு மேஜராக பதவி உயர்வு பெற்றார்.

பின்னர் அவர், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ராஷ்டிரிய ரைபிள்ஸின் 44 வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். இந்தியா – பாகிஸ்தான் மோதல் பதற்றம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டார்.

தனது 31 வது பிறந்தநாளுக்கு இரண்டு வாரங்களில், ஏப்ரல் 25, 2014 அன்று, தெற்கு காஷ்மீரில் ஒருவரது வீட்டில் தீவிரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை செய்தியைப் பெற்றார் முகுந்த்.

சிவகார்த்திகேயன்

தனது குழுவுடன் அந்த இடத்துக்கு விரைந்தார். சிபாய் விக்ரம் சிங்குடன் சேர்ந்து, பலத்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பித்து வெற்றிகரமாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களது தாக்குதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான், ஆனால் அவர்களின் இலக்கான ஹிஸ்புல் முஜாகிதீன் மூத்த தளபதி அல்டாஃப் வானி தப்பி ஓடிவிட்டான்.

வானியும் மற்றொரு தீவிரவாதியும் சிமென்ட் அவுட்ஹவுஸ் ஒன்றில் மறைந்திருக்க அந்த இடத்தில் தாக்குதல் மேற்கொண்டார் முகுந்த். கிரானைடு வெடிகளால் மற்றொரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.

வானி, சிபாய் விக்ரம் சிங்கை சுட்டதில் அவரது கழுத்து மற்றும் தாடையில் காயமடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் விக்ரம் சிங்.

இதற்கு பதிலடியாக வானியை சுட்டு வீழ்த்தினார் முகுந்த் வரதராஜன். இந்த சண்டைக்குப் பிறகு நலமாக இருப்பதாகவே காட்டிக்கொண்டுள்ளார் முகுந்த். ஆனால் அவுட்ஹவுஸைத் தாண்டும்போது சுருண்டு விழுந்தார். ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

முகுந்த் வரதராஜனுக்கு தேசத்தின் மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருதான அசோக சக்ரா வழங்கப்பட்டது. அதே சமயம் சிங்குக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருதான சௌரிய சக்ரா வழங்கப்பட்டது.

2015ம் ஆண்டு குடியரசு தினத்தில் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியிடம் கௌரவமாக விருதைப் பெற்றார் இந்து. தமிழ்நாட்டில் இருந்து அசோக சக்ரா விருது பெற்ற 4வது வீரர் முகுந்த் வரதராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.