டிரம்ப் நிலையற்றவர்.. பழிவாங்க துடிப்பவர்: இறுதிக்கட்ட பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் விளாசல்

வாஷிங்டன்:

அமெரிக்காவில் வரும் 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் (வயது 60), டொனால்டு டிரம்ப் (வயது 78) ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்வதுடன் வாக்காளர்கள் நல்ல முடிவை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவ்வகையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஷ் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

டொனால்ட் டிரம்ப் தனது கருத்திற்கு உடன்படாத அமெரிக்க மக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த நினைக்கிறார். உள்ளிருந்து வரும் எதிரியாக மக்களை அழைக்கிறார். உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது என்று சிந்திக்கும் ஜனாதிபதி வேட்பாளர் அவர் அல்ல. அவர் நிலையற்றவர், பழிவாங்குவதை நோக்கமாக கொண்டவர். இந்த தேர்தலானது சுதந்திரங்கள் வேண்டுமா? அல்லது குழப்பவாதம் மற்றும் பிரிவினைவாதம் வேண்டுமா? என்பதை தேர்ந்தெடுக்கும் தேர்தல்.

அவர் வழக்கு தொடர விரும்பும் எதிரிகளின் பட்டியல் நீளமாக உள்ளது. ஜனவரி 6-ம் தேதி அதிகாரிகளை தாக்கிய வன்முறையாளர்களை விடுவிப்பது அவரது முன்னுரிமை திட்டங்களில் ஒன்று என அவரே கூறுகிறார்.

மற்றவர்களை குறைகூறி விரல்களை நீட்டி பேசுவதை நிறுத்திவிட்டு கைகளை கோர்க்க வேண்டிய நேரம் இது. நாடகம் மற்றும் மோதல், பயம் மற்றும் பிரிவினை ஆகியவற்றின் பக்கத்தை திருப்ப வேண்டிய நேரம் இது. அமெரிக்காவில் புதிய தலைமுறை தலைமையேற்கும் நேரம் இது. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக, அந்த தலைமையை வழங்கி மக்கள் சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.