`இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றனர்!' – காங்கிரஸைச் சாடி, தேச ஒற்றுமை பற்றி மோடி பேசியது என்ன?

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து அரசியல் லாபத்துக்காக தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் ‘நகர நக்சல்கள்’ என்று பேசியுள்ளார்.

சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்தநாள் தினம் இன்று. 2014ம் ஆண்டு முதல் படேலின் பிறந்தநாள் தேச ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேச ஒற்றுமை தினம் தீபாவளியுடன் இணைந்து வந்துள்ளது.

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய மோடி, “பல நாடுகள் பிரிந்து செல்லும் வேளையில், இந்தியா மேலும் ஒன்றிணைந்து வருகிறது. இது சாதாரண நிகழ்வு அல்ல, புதிய வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாம் நமது பிரச்னைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்கிறோம் என்பதை உலகமே கவனித்து வருகிறது. அதனால் நாம் ஒற்றுமையுடன் இருக்கவேண்டியது அவசியம்” என்று பேசியிருந்தார்.

மேலும் அவர், “இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் சில மோசமான சக்திகள் இந்தியாவின் வளர்சியைப் பார்த்து கவலைகொள்கின்றனர். அவர்கள் உலகளாவிய முதலீட்டாளர்களிடம் தவறான கருத்துகளைக் கொண்டு சேர்க்கின்றனர். தவறான தகவல்களை பிரசாரம் செய்கின்றனர். மக்களை சாதிகளாக பிரித்து, இந்திய சமூகத்தின் ஒற்றுமையை கெடுக்க நினைக்கின்றனர்.

கார்கே, ராகுல் காந்தி

அவர்கள் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கின்றனர். ஏனென்றால் ‘ஏழை இந்தியா, பலவீனமான இந்தியா’ என்ற அரசியல்தான் அவர்களுக்குப் பொருந்துகிறது. அவர்கள் அரசியலைப்பின் பெயரில் இந்தியாவைப் பிரிக்கின்றனர். நாம் இந்த நகர்ப்புற நக்சல் கூட்டணியை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக போராட வேண்டும்.” என்று பேசினார் மோடி.

மோடி எந்த எதிர்க்கட்சியையும் குறிப்பிடவில்லை என்றாலும், காங்கிரஸின் நாடாளுமன்ற பிரசாரங்களான ‘அரசியலமைப்பை பாதுகாத்தல்’ மற்றும் ‘சாதிவாரி கணக்கெடுப்பை’ குறிப்பிட்டே பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

“முந்தைய அரசாங்கங்களின் பாரபட்சமான கொள்கைகள், நாட்டின் ஒற்றுமையை சிதைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் புதிய அரசு பாரபட்சங்களை ஒழித்திருக்கிறது. இதனால் மக்களின் அதிருப்தியின்மை முடிந்து, வளர்சித் திட்டங்கள் மீது நம்பிக்கை பிறந்துள்ளது.” என்றும் பேசினார் மோடி.

ஒரே நாடு ஒரே தேர்தல்

மேலும் தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டங்களாக பின்வருவனவற்றை பட்டியலிட்டார் மோடி.

ஆதார் – ஒரே நாடு ஒரே அடையாள அட்டை

ஜி.எஸ்.டி – ஒரே நாடு ஒரே வரி

ஆயுஷ்மான் பாரத் – ஒரே நாடு ஒரே ஹெல்த் இன்சூரன்ஸ்

மேலும் அவர் இந்த ஒற்றுமையை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் பலப்படுத்தும் என்றும் இந்தியா ஒரே நாடு ஒரே சிவில் கோடு என்பதை நோக்கி முன்னேறுவதாகவும் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.