ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரிஷப், ராகுல், அஸ்வின் உள்ளிட்ட 10 இந்திய நட்சத்திரங்கள்

IPL 2025 Mega Auction Tamil | ஐபிஎல் 2025 தொடருக்காக தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் ஐபிஎல் நிர்வாகத்துக்கு சமர்பித்துவிட்டன. இந்த பட்டியல் இப்போது வெளியாகியிருக்கும் நிலையில், பல முக்கிய இந்திய பிளேயர்களே இம்முறை ஏலத்துக்கு வந்திருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் என்றால் ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது குறித்த விரிவான தகவலை இங்கே பார்க்கலாம். 

கேஎல் ராகுல்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல், இம்முறை அந்த அணியில் நீடிக்க விரும்பவில்லை. அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் கடந்த ஐபிஎல் தொடரின்போது மனக்கசப்பு ஏற்பட்டது. இம்முறை அதிக தொகை கொடுத்து தக்க வைக்க அந்த அணி தயாராக இருந்தபோதும் கேஎல் ராகுல் லக்னோ அணியில் இருக்க சம்மதிக்கவில்லை. அதனால் ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க உள்ளார் அவர். ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் கேஎல் ராகுலை ஏலம் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ரிஷப் பந்த்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த் இம்முறை ஏலத்திற்கு வந்திருக்கிறார். அவரை டெல்லி அணி தக்கவைக்கவில்லை. அந்த அணி நிர்வாகத்துக்குள் இப்போது பெரிய மாற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. அதனால், ரிஷப் பந்த் வைத்த சில கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால் அந்த அணியில் நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்துவிட்டார் ரிஷப் பந்த். அதனால் அவர் இம்முறை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மெயின் டார்க்கெட்டாக இருக்கிறார். 

ரவிச்சந்திரன் அஸ்வின்

சென்னை, பஞ்சாப், டெல்லி அணிகளுக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஐபிஎல் தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினார். இம்முறை அவரை அந்த அணி தக்கவைக்கவில்லை. இதனால் அவருடைய பெயர் ஏலத்துக்கு வந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட அஸ்வின் விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் சிஎஸ்கே அணியின் முடிவு சஸ்பென்ஸாக இருக்கிறது.

முகமது ஷமி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் முகமது ஷமி, ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக விளையாடினார். அவரை அந்த அணி இம்முறை தக்கவைக்கவில்லை. அதனால் ஏலத்துக்கு வந்திருக்கிறார் ஷமி. நிச்சயமாக இவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டி போடும். இவர் இப்போது காயம் காரணமாக சிகிச்சை பெற்று பவுலிங் பயிற்சியை தொடங்கியிருக்கிறார். ஓராண்டுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் இருக்கிறார். பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு இந்திய அணிக்குள் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை.

ஸ்ரேயாஸ் அய்யர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ஸ்ரேயாஸ். அவருக்கும் கேகேஆர் அணிக்கும் ரீட்டெயின் விஷயத்தில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் அந்த அணியில் இருந்து வெளியேறியிருக்கும் அவர் ஐபிஎல் ஏலத்தில் பங்கெடுக்கிறார். ஸ்ரேயாஸ் அய்யரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலம் எடுக்க அதிக ஆர்வம் காட்டும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஏற்கனவே டெல்லி அணிக்காக இருந்தவர் தான். சில காரணங்களால் கேகேஆர் அணிக்கு சென்ற நிலையில் இம்முறை மீண்டும் டெல்லி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஷான் கிஷன்

மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப்பிள்ளையாக இருந்த இஷான் கிஷன் இம்முறை அந்த அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணியினருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அணியில் இருந்து வெளியேறி இந்தியா திரும்பினார். அதன்பின்னர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியபோதும், அதனை கேட்காமல் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானார். இப்போது எம்ஐ அணியும் நீக்கியிருப்பதால் ஐபிஎல் ஏலத்துக்கு வருகிறார். 

மற்ற ஸ்டார் பிளேயர்கள்

இதேபோல் ஷர்தல் தாக்கூர், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் ஐபிஎல் ஏலத்துக்கு வந்திருக்கின்றனர். இப்போது இந்திய அணியின் ஸ்டார் பிளேயராக உருவெடுத்திருக்கும் வாஷிங்கடன் சுந்தரும் ஐபிஎல் ஏலத்துக்கு வருகிறார். அவரை ஏலம் எடுக்க சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தயாராக இருக்கின்றன. இந்த பிளேயர்களுக்கும் வரும் ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பது மட்டும் உறுதி. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.