சென்னையில் வசித்துவரும் கார்த்திக் (ஜெயம் ரவி) சட்டப்படிப்பைப் பாதியிலே விட்டுவிட்டுப் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் ஜாலியாக நேரத்தைச் செலவிடுபவர். பிறரைப் பற்றிக் கவலைகொள்ளாமல் எதற்கெடுத்தாலும் சட்டம் பேசும் அவரால் காவல்துறை வரை சென்று அவமானப்படுகிறது அவரின் குடும்பம். அவரது தந்தையும் ரத்த அழுத்தத்தால் மயங்கி விழ, ஊட்டியிலிருக்கும் கார்த்திக்கின் அக்கா (பூமிகா) சென்னைக்குக் கிளம்பி வருகிறார். அப்பாவின் உடல்நிலை சரியாக வேண்டுமென்பதற்காகத் தம்பியைப் பொறுப்பான ஆளாக மாற்றுவதாகச் சபதம் ஏற்று, அவரைத் தன் புகுந்த வீடு இருக்கும் ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே எல்லாவற்றிற்கும் அட்டவணை போட்டு வாழும் அந்த கறாரான குடும்பம் கார்த்திக்கின் வருகைக்குப் பின் என்ன ஆகிறது என்பதே `பிரதர்’ படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் அடித்துத் துவைத்துக் காயப்போட்ட, இயக்குநர் ராஜேஷே பலமுறை கையாண்ட, வேலைக்குச் செல்லாத பொறுப்பற்ற ஹீரோவாக ஜெயம் ரவி. கதாபாத்திரம் எழுதப்பட்ட விதத்திலேயே எல்லாம் பழைய நகைச்சுவையாக இருக்க, அவரின் ஹ்யூமர் நடிப்பு முயற்சி தோல்வியில் முடிகிறது. கதையோடு ஒட்டாத சென்டிமென்ட் காட்சிகளில் அவரது நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகிறது. டெம்ப்ளேட் நாயகியாகப் பிரியங்கா மோகன் நடித்தால்தானே இப்படியெல்லாம் விமர்சனம் செய்வீர்கள் என ஆங்காங்கே வந்து போகிறார்.
வெகுநாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் பூமிகா, ஆனால் நடிப்பிற்கேற்ற பாத்திரமில்லை என்பது ஏமாற்றமே! இஷ்டத்துக்கு ஆங்கிலம் பேசுவது, படு செயற்கையான உடல்மொழி என நமது பொறுமை மீட்டரை வெடிக்க வைக்கிறார் சரண்யா பொன்வண்ணன். அவரோடு விடிவி கணேஷ், சதீஷ் ஆகியோர் டேக் டீம் போட்டுப் பாடாய்ப்படுத்துகிறார்கள். ராவ் ரமேஷ், நட்ராஜ் சுப்ரமணியன் ஆகியோர் கொடுக்கப்பட்ட பணியைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் தவிர சீதா, அச்யுத் குமார், எம்.எஸ் பாஸ்கர் என அடிஷன் ஷீட் கேட்கும் அளவுக்கு ஆட்கள் இருந்தும் எந்தப் பலனுமில்லை.
‘மக்காமிஷி’ பாடல் உருவாக்கப்பட்ட விதம், ஊட்டியின் சாலைகளில் டிரோன் பறக்கவிட்டது என ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம் தனது பங்குக்குப் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார். கத்திரி போடுவதற்கு முதலில் துணியாவது இருக்க வேண்டுமே என்கிற படத்தொகுப்பாளர் ஆஷிஷ் ஜோசப்பின் ஆதங்கம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. சாண்டியின் சிறப்பான நடன வடிவமைப்பில் வைரல் ஹிட்டடித்த ‘மக்காமிஷி’ பாடலிலும், ‘அமுதா’ பாடலிலும் வின்டேஜ் ஹாரிஸ் ஜெயராஜ் எட்டிப் பார்க்கிறார். ஆனால் பின்னணி இசை சுமார் ரகமே! அதிலும் இரண்டாம் பாதியில் ஏன், எதற்கு என்று தெரியாமலே ஆங்காங்கே ‘மக்காமிஷி, மக்காமிஷி’ என்ற பாடல் பின்னணியில் ஓடிக்கொண்டிருப்பது ஏனோ?
‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஓ.கே.ஓ.கே’ என தனது படங்களில் வரும் கதாநாயகன் கேரக்டர்களை மிக்ஸியில் அடித்து ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். இந்தமுறை கதாநாயகனின் நண்பர் மட்டும் மிஸ்ஸிங்! ஆறுதல் தரக்கூடிய ‘மக்காமிஷி’ பாடலும் ஆரம்பத்திலேயே முடிந்துவிட, சிரிக்க வைக்க முயன்றார்கள், முயற்சி செய்கிறார்கள், செய்துகொண்டே இருந்தார்கள் எனச் சோதனை ஓட்டமாகவே நகர்கிறது திரைக்கதை. சோதனை மேல் சோதனையாக நடுநடுவே பாடல்களும் சண்டைக் காட்சிகளும் நம் பொறுமையை ‘எல்லாம் ஒரு அளவுக்குத்தான் ப்ரோ’ என்று சோதிக்க வைக்கின்றன.
இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடனே சம்பந்தமே இல்லாத இடங்களில் ஹாரிஸ் ஜெயராஜ் சோகமான இசைக் கருவிகளை வாசிக்கத் தொடங்குகிறார். அது ‘சம்மர் டைமில் உல்லன் கோட் போட்ட புலி’ என்ற பாடல் வரிகளைப் போலவே காட்சிகளுக்குச் சம்பந்தமில்லாமல் திரையரங்கத்தில் பரிதாப நிலைமையிலிருக்கும் ரசிகர்களின் நிலையைக் குறிக்கும் விதமாக வாசிக்கப்படுவதாக மாறிப்போகிறது.
‘காமெடி படம், லாஜிக் பாக்காதீங்க’ என்றாலும் குழந்தையைத் தத்தெடுக்க மருத்துவர் சொல்லும் காரணங்கள் எல்லாம் நம்மை அதிர வைக்கின்றன. மனநல மருத்துவராக எம்.எஸ்.பாஸ்கர் காட்சி எல்லாம் உச்சக்கட்ட சோதனை பாஸு! இலக்கே இல்லாமல் மலை ஏறுவது போலக் கடைசிவரை கதை எதை நோக்கிப் போகிறது என்பது புலப்படவே இல்லை. அந்த இரண்டாம் பாதி ட்விஸ்ட் வந்த பிறகாவது திரைக்கதை சுவாரஸ்யமாக நகரும் என எதிர்பார்த்தால் ‘டேக் டைவர்சன்’ போட்டு ஊட்டி மலையின் கொண்டை ஊசி வளைவுகளில் ஓடவிட்டிருக்கிறார்கள்.
திரைக்கதையிலும் எழுத்திலும் எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் உருவாகியிருக்கும் இந்த `பிரதர்’, மக்கள் ரசனையை மிகவும் குறைத்து மதிப்பிட்டிருக்கிறான்.