எதிர் நீச்சல் சீரியல் கிராமம் முதல் சிட்டி வரை பேசப்பட்ட தொடர். அந்தத் தொடரில் இருக்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தின் நான்கு மருமகள்களில் கூடுதல் கவனம் பெற்றவர் நந்தினி. அட ஆமாங்க.. நக்கல், நையாண்டி, என்பதையெல்லாம் தாண்டி, கொடூர வில்லனாக வரும் ஆதி குணசேகரனைப் பார்த்து எல்லாரும் நடுங்கும் போது, நந்தினி மட்டும், `ம்ஹ்ஹும்…’ என்ற வார்த்தையில் அவரை நக்கல் செய்வதெல்லாம் வேற ரகம்.
அந்தத் தொடரைப் பார்க்காதவர்களையும் தன் நகைச்சுவை நடிப்பால், ரசிகர் வட்டத்துக்குள் கொண்டு வந்தார் நந்தினி. ‘என்னடா இந்தப் பொண்ணு குணசேகரனையே இந்தப் போடு போடுது’ என வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பேச வைத்தவர். அவர்தான் ஹரிப்பிரியா இசை. அவரின் அந்த நந்தினி பாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பதைப் போல, அவருடைய வாழ்வில் நீங்கா இடம்பிடித்த ஒரு தீபாவளி எது எனக் கேட்டோம்.
அதற்கு அவர், “மறக்கமுடியாத தீபாவளி நிறைய இருக்கே… அது லிஸ்ட் பெருசா போகும். ஆனா என்னோட மறக்கமுடியாத தீபாவளினு பொதுவா சொல்லனும்னா எங்க ஊர்ல நான் செலிபிரேட் பண்ண தீபாவளியைச் சொல்லலாம். தஞ்சாவூர் மாவட்டம் நெடுந்தெருதான் எங்க ஊரு. எல்லா தீபாவளிக்கும் ஊருக்குப் போயிடுவோம். தீபாவளிக்கு முதல் நாள் தஞ்சாவூர் பாபநாசத்துக்கு ஷாப்பிங் பண்ண போவோம். எல்லா தீபாவளிக்கும் எங்க பாட்டி சீதா லட்சுமி பட்டுப் பாவாடைதான் வாங்கி கொடுப்பாங்க. அதெல்லாம் ரொம்ப ஸ்பெஷல். ஒவ்வொரு வருஷமும் ‘இந்த வருஷம் என்ன கலர் பாவாடை எடுப்பாங்கா’னு ஒரே ஆர்வமா இருக்கும்.
தீபாவளிக்கு முதல்நாள் பாட்டி வீட்லேயே முறுக்கு, அல்வானு நிறைய பலகாரம் செய்வாங்க. அது செய்யும்போது கூடவே உட்கார்ந்து கதை கேட்போம். பாட்டி செமயா பாடுவாங்க… அவங்களைப் பாட சொல்லி கேட்டுட்டு இருக்கிறதுனு தீபாவளிக்கு முதல் நாள் செமயா போகும். அடுத்த நாள் அதாவது தீபாவளி அன்னைக்குக் காலைல 4 மணிக்குலாம் பாட்டி எல்லாரையும் எழுப்பி விட்டுடுவாங்க. விறகு அடுப்புல சுடு தண்ணி வச்சி, நலங்கு வச்சி குளிக்க வைப்பாங்க. தாத்தா பாட்டி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினத்துக்கு அப்புறம்தான் பட்டு பாவாடை கொடுப்பாங்க.
அப்புறம்தான் ஸ்பெஷலான பட்டாசு கிடைக்கும். வீட்டுல இருக்குற எல்லா குழந்தைகளுக்கும் பட்டாசு பிரிச்சி கொடுத்துடுவாங்க. அங்க பக்கத்துல என்னோட ஃபிரண்ட் ஹரினி இருப்பா. அவ வீட்டுக்குப் போயிட்டு, அங்கிருந்து கோயில் போயிட்டு வந்தா வீட்டுல சூப்பர் சாப்பாடு இருக்கும். சும்மாவே எங்க ஊர் பக்கம் சாப்பாடு செமயா இருக்கும். தீபாவளிக்குலாம் சொல்லவே தேவையில்ல. மதியம் அப்படியே ஊஞ்சல்ல தூங்கிட்டு, சாயங்காலம் பட்டாசு வெடிப்போம். ஈவ்னிங் போட்டுகுறதுக்காக சென்னைலிருந்து ஒரு டிரெஸ் எடுத்துட்டுப் போயிடுவேன்.
சாயங்காலம் குடும்பத்தோட கோயில்போயிட்டு வருவோம். அந்த நாளே செமயா இருக்கும். இப்போ அதை நினைச்சுப் பார்த்தாலும் அவ்ளோ ஹாப்பி மெமரீஸ். அந்த தீபாவளி எதையும் என்னால மறக்கவே முடியாது” எனப் பெருமையும், குதூகலமும் பொங்க பேசி முடித்தார்.
சின்னத்திரைக்கு வழங்கப்படும் விருதுகளில் சிறந்த துணை நடிகை உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கும் ஹரிப்பிரியா இசை, வெள்ளித்திரையிலும் விருதுகளால் வெளிச்சம்பெற விகடன் சார்பில் வாழ்த்துகள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…