1980-களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் மோகன்லால், மம்மூட்டி, விஜயகாந்த், சத்யராஜ், மோகன் உள்ளிட்ட அப்போதைய ஸ்டார் கதாநாயகர்களுடன் நடித்தவர் நடிகை நளினி.
1987-ல் நடிகர் ராமராஜனை காதல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அருணா, அருண் ஆகிய இரண்டு பிள்ளைகள். குணச்சித்ர நடிகையான இவர், தன் உடல் அசைவுகளாலும், முக பாவனைகளாலும் சிரிக்க வைக்கமுடியும் என்பதை பல படங்களில் நிகழ்த்திக் காட்டியவர். காதல் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் தாண்டி தன்னால் நகைச்சுவையாக பாத்திரத்திலும் ரகளையான பெர்பாமன்ஸ் காட்ட முடியும் என நிரூபித்துக் காட்டியவர். ‘லண்டன்’ திரைப்படத்தில் வடிவேலு காம்போவிலும், ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடர் மூலமும் நிரூபித்துக் கலக்கியிருப்பார். அதே காலகட்டத்தில் வெளியான கோலங்கள் சீரியலில் அகங்கார அலமேலுவாக வந்து நம்மை கொதிக்கவும் வைத்திருப்பார்.
இப்படி தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களுக்கு இவரின் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கும் நடிகை நளினியிடம், தீபாவளி அனுபவங்கள் குறித்துப் பேசினோம். வேறு ஏதோ அலுவல் பரபரப்பில் இருந்தாலும், நாம் கேட்ட கேள்விகளுக்கு புன்னகையுடன் பதிலளித்தார்.
உங்க தலதீபாவளி நினைவிருக்கா?
“நான் வீட்டை எதிர்த்துத் கல்யாணம் பண்ணிகிட்டதால எனக்கு தல தீபாவளிலாம் நடக்காதுனுதான் நினைச்சேன். என கணவரும் ‘அதெல்லாம் வேணாம்மா… நான் இருக்கேன் பாத்துக்கலாம்’னு சொன்னார். எங்க அம்மா என் தங்கச்சிக்கு தல தீபாவளிக்கு நிறைய செஞ்சாங்க. அதே மாதிரி எனக்கும் செய்யணும்னு மனசுகுள்ள அவ்ளோ ஆசை. அதனால், எங்க அம்மாவுக்கு போன் பண்ணி தல தீபாவளிக்கு அழைப்பு கொடுங்கன்னு கேட்டேன். அப்போதான் நாங்க திரும்ப வீட்டாளுங்ககூட பேச ஆரம்பிக்கிற தொடக்கம். எங்க அம்மாவும், சின்ன சின்ன சில்வர் டப்பாவுல பலகாரங்கள் கொண்டுவந்து கொடுத்துட்டு, தல தீபாவளிக்கு அழைப்பு கொடுத்துட்டு போனாங்க.
நாங்களும், என் ஆசை நிறைவேறப்போறதை நினைச்சி சந்தோஷமா கிளம்பி போனோம். தீபாவளி அன்னைக்கு வெள்ளி கிண்ணத்துல எண்ணெய் எடுத்து, மருமகன் தலையில மாமியார்தான் எண்ணெய் வைக்கனும். அது எங்க ஊர்பக்கம் பழக்கம். அதுக்கு எங்க அம்மாவை கூப்பிட்டா, ‘அதெல்லாம் முடியாது… என்ன நினைச்சிட்டு இருக்க…’ அப்படி இப்படினு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு சரியான கோபம் வந்து, ‘இப்போ நீ எண்ணெய் வைக்கலனா நான் திரும்பவும் பெட்டியை எடுத்துகிட்டுக் கிளம்பிடுவேன்’-னு சொன்னேன். வேற வழியே இல்லாம அம்மா எண்ணெய் தேய்ச்சாங்க. அதுகப்புறம் குளிச்சு சாப்பிட்டுட்டு, மகாலிங்கபுரம் வீட்டுல பட்டாசெல்லாம் வெடிச்சி ரொம்ப சந்தோசமா இருந்தது எங்க தல தீபாவளி.”
சின்ன வயது தீபாவளியில் சிறுமி நளினி என்ன செய்துகொண்டிருந்தார்?
“என் கூட பிறந்தவங்க 8 பேர். அதனால் எங்க அப்பா எல்லாருக்கும் பட்டாசு கொஞ்சம் கொஞ்சம் தான் பிரிச்சுக் கொடுப்பார். எல்லாரும் பட்டாசு வெடிக்கும்போது, நான் மட்டும் அதை யாருக்கும் தெரியாம பத்திரமா மறைச்சு வச்சுப்பேன். அதை யாருக்கும் காட்டவும் மாட்டேன். என் அண்ணன், தம்பிங்க எல்லாரும் பட்டாசு கையில் கிடைச்சதிலிருந்து வெடிச்சிட்டே இருப்பாங்க. அவங்களோடது எல்லாம் முடிஞ்சதும் என்கிட்டதானே வரணும். அதுக்காக காத்திருப்பேன். அதே மாதிரியே வந்து என் பட்டாசைக் கேப்பாங்க. ஆனா நான் யாருக்கும் அதைக் கொடுக்கமாட்டேன். ‘அந்தப் பட்டாஸை கார்த்திகைக்கு வெடிக்க வச்சிருக்கேன். இன்னிக்கு வெடிக்கல’ன்னு சொல்லிட்டுப் போயிடுவேன். அப்பப்போ நான் மறைச்சு வச்ச இடத்துல அந்தப் பட்டாசு பை இருக்கான்னு போய் பார்த்துட்டு வருவேன்.
நான் பார்க்கும்போதெல்லாம் அந்தப் பை அப்படியேதான் இருக்கும். ஆனா, எல்லாரும் வெடிச்சு முடிச்சதும் என் பட்டாசை எடுத்து வெடிக்கலாம்னு போன, அந்தப் பையில எதுவும் இருக்காது. எனக்கு செமகோவம் வந்து கத்தி அழுது புரண்டு ரணகளம் பண்ணிடுவேன். எங்க அம்மா, ‘கொடுத்தப்போவே வெடிக்க வேண்டியதுதானே… இப்போ வந்து ஏன் அழுகுற’னு செம மாத்துவிழும் எனக்கு. ஆனா, இப்போலாம் சிவகாசியிலிருந்து பட்டாசு வரவச்சி, ஆசைதீர தீபாவளிக்கு வெடிச்சு முடிக்கிறேன்.”
தீபாவளி ஸ்பெஷல்னா என்ன சொல்லுவிங்க?
“தீபாவளினாலே ஸ்பெஷல் தான். இதுவரைக்கு எந்த தீபாவளியையும் எதுக்காகவும் கொண்டாடாம இருந்ததே இல்லை. எல்லா தீபாவளியும் சந்தோஷமானது தான். ராக்கெட் விடும்போது யாருக்கும் எதுவும் ஆகிடக்கூடாதுனு சின்ன பயம் மட்டும் இருக்கும். மத்தபடி ஹாப்பியா செலிபிரேட் பண்ணுவேன். என் பையன் பட்டாசுக்கு பயங்கரமா பயப்படுவான். அது மட்டும் கொஞ்சம் டென்ஷன் ஆகும். மத்தபடி செம ஜாலியா போகும். தீபாவளி அன்னைக்கு என் ரெண்டு பிள்ளைகளுக்கு என்ன பிடிக்குமோ அதையெல்லாம் செஞ்சு டேபிள்ள அடுக்கி வச்சிருவேன். என் பொண்ணுக்கு கேசரி புடிக்கும் இதுதவிர தீபாவளிக்கு எங்கவீட்ல பொங்கலும் இருக்கும். மத்தபடி கடை ஸ்வீட்லாம் என் பிள்ளைங்க சாப்பிடமாட்டாங்க.”
என்றபடி உற்சாகமாக தீபாவளி வாழ்த்து சொன்னார் நளினி!