வாஷிங்டன்: கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை நிராகரித்து விட்டனர். எனது நிர்வாகத்தின் கீழ், இந்தியாவுடனும் எனது நல்ல நண்பருமான பிரதமர் மோடியுடனான நமது சிறந்த கூட்டாண்மையையும் வலுப்படுத்துவோம என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இன்னபிற சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அந்த நாட்டில் இன்னும் ஒரு குழப்பமான நிலை நீடிக்கிறது.
நான் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை நிராகரித்து விட்டனர். இஸ்ரேல், உக்ரைன் முதல் நம்முடைய தெற்கு எல்லை வரை அவர்கள் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் மீண்டும் அமெரிக்காவை வலிமையான நாடாக மாற்றி, அமைதியை கொண்டு வருவோம்.
தீவிர இடதுசாரிகளின் மத எதிர்ப்பு கொள்கையை எதிர்த்து இந்து அமெரிக்கர்களையும் பாதுகாப்போம். உங்கள் சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுவோம். எனது நிர்வாகத்தின் கீழ், இந்தியாவுடனும், எனது நல்ல நண்பருமான பிரதமர் மோடியுடனும் நமது சிறந்த கூட்டாண்மையையும் வலுப்படுத்துவோம்.
கமலா ஹாரிஸ் உங்கள் சிறு வியாபாரங்களை அதிக கட்டுப்பாடுகள் மற்றும் அதிக வரிகளின் மூலம் அழித்துவிடுவார். இதற்கு நேர்மாறாக, நான் வரிகளை குறைத்தேன். கட்டுப்பாடுகளை குறைத்தேன். வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கினேன். நாங்கள் அதை மீண்டும் செய்வோம், முன்னெப்போதையும் விட பெரியதாகவும் சிறப்பாகவும் செய்வோம். மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபத் திருவிழா தீமையை அழித்து நன்மையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.