மும்பை: மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பிறகு காணாமல் போன சிவசேனா எம்எல்ஏ நேற்று காலையில் வீடு திரும்பினார்.
மகாராஷ்டிராவின் பல்கார் தொகுதி எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் வங்கா. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த இவருக்கு எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் எம்.பி. ராஜேந்திர காவிட்டை வேட்பாளராக ஷிண்டே தேர்வு செய்தார். இதனால் வங்கா ஏமாற்றம் அடைந்தார். உத்தவ் தாக்கரேவை விட்டு வந்ததற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். விசுவாசமான உறுப்பினர்களை பாதுகாப்பேன் என அளித்த வாக்குறுதியை ஷிண்டே காப்பாற்றவில்லை என்றும் புகார் கூறினார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைப்பயற்சிக்கு செல்வதாக கூறிச்சென்ற வங்கா பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் வீட்டுக்கு அருகில் நின்ற ஒரு காரில் ஏறிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
கடந்த 2019 முதல் பல்கார் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் அவருக்கு கட்சி மீண்டும் சீட் வழங்கும் என நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் சீட் வழங்கப்படாததால் வங்கா மனமுடைந்து இருந்ததாக அவரது மனைவி கூறினார். இதையடுத்து பல்கார் மாவட்டம் முழுவதும் வங்காவை தேடும் பணி நடைபெற்றது.
மறுநாள் வங்காவின் குடும்பத்தினரை முதல்வர் ஷிண்டே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சிவசேனா (உத்தவ் தாக்கரே) நிர்வாகி பங்கஜ் தேஷ்முக், வங்காவின் வீட்டுக்கு வந்து விசாரித்தார். வங்கா சுயேச்சையாக போட்டியிடுவார் எனவும் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வருவார் என்றும் நேற்று முன்தினம் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவ்வாறு அவர் வராததால் பதற்றம் அதிகரித்தது. அவரை தேடும் பணி தீவிரம் அடைந்தது.
இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் வங்கா நேற்று அதிகாலையில் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் குடும்பத்தினர் அனைவருடனும் வங்கா பேசினார். பிறகு ஓய்வு தேவைப்படுவதாக கூறி நண்பர்களுடன் வெளியில் புறப்பட்டுச் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.