புதுடெல்லி: தீபாவளி நாள் (அக்.31) இரவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அவசர அழைப்புகள் வந்ததாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் தீ விபத்து மற்றும் அவசரநிலை தொடர்பாக 320 அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட அதிகம்.
இதுகுறித்து, டெல்லி தீயணைப்பு சேவைத் துறை இயக்குநர் அதுல் கார்க் கூறுகையில், “பெரிய தீ விபத்துக்கள் தொடர்பான பதிவுகள் எதுவும் இல்லை என்றாலும் சிறுசிறு விபத்துகள் தொடர்பாக பல அழைப்புகள் தீயணைப்புத்துறைக்கு வந்தன நேற்று மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை 192 அழைப்புகள் பதிவாகின. நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை 158 அழைப்புகள் பதிவாகின.
மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பதிவான அழைப்புகள் 300-ஐ கடந்த விட்டது. இந்தாண்டு தீபாவளிக்கு தீயணைப்பு படைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டதால் பெரும் தீ விபத்துக்கள் தடுக்கப்பட்டன” என்றார். டெல்லியில் தீபாவளி நாளில் நடந்த தீ விபத்து சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே, டெல்லி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து டெல்லி போக்குவரத்து கழக இயக்குநர் கூறுகையில், “நேற்று மாலை 6.30 மணிக்கு நஜாஃப்கர் பகுதியில் ஒருவர் பேருந்தில் பொட்டாஷ் எடுத்துச் செல்வதாக அழைப்பு வந்தது. பொட்டாஷ் வெடித்து பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர்.” என்றார்.
காற்று மாசு அளவு அதிகரிப்பு: டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடையை மீறியும் மக்கள் பட்டாசு வெடித்ததால், வெள்ளிக்கிழமை காலை தலைநகரில் காற்று மாசு அதிகரித்தது, நகரம் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 350 ஆக இருந்தது. பெரும்பாலான இடங்களி காற்றின் தரம் மிகவும் மோசம் என்றநிலையில் இருந்தது.
ஹைதராபாத்திலும் மோசம்: தீபாவளி நாள் இரவில் நகரவாசிகள் பட்டாசு வெடித்து தீபாளியைக் கொண்டாடியதால் நகரின் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்திருந்தது. ஹைதராபாத் போலீஸார் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடைவிதித்திருந்த நிலையில் அதைத் தாண்டியும் மக்கள் பட்டாசு வெடித்தனர்.
மும்பை, சென்னையிலும் தீவிரமடைந்த காற்று மாசு: தலைநகர் டெல்லியைப் போலவே மற்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களான மும்பை மற்றும் சென்னையிலும் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தது. பல்வேறு இடங்களில் புகைமூட்டங்கள் காணப்பட்டன.