புதுடெல்லி: மாநிலங்கள் உருவாக்க நாளினை முன்னிட்டு பல்வேறு மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில் பல்வேறு மாநிலங்களின் தனித்தன்மைகளை எடுத்துக்கூறி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தனது பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது, “கன்னடா ராஜ்யோத்சேவா என்பது, கர்நாடகாவின் முன்மாதிரியான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மற்றும் புதுமைகளை உருவாக்கும் சிறந்த மனிதர்களை இம்மாநிலம் பெற்றுள்ளது. கர்நாடகாவின் மக்கள் எப்போதும் ஆசீர்வாதத்துடன் மகிழ்ச்சியாகவும், வெற்றியுடனும் இருக்கட்டும்.
மத்தியப் பிரதேசம் ஏராளமான இயற்கை வளங்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் அதன் நாட்டுப்புற மரபுகள் மற்றும் பழங்குடி கலாச்சாரத்தால் விவரிக்கப்படுகிறது. இந்த மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறது.
கேரளா அதன் மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை காட்சிகள், வலிமையான பாரம்பரியம் மற்றும் கடினமாக உழைக்கும் மக்களுக்காக பெயர் பெற்றது. உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் கேரளா மக்கள் தங்களின் முத்திரைகளை பதித்துள்ளனர். இம்மாநில மக்கள் வருங்காலங்களில் முன்னேறட்டும்.
ஹரியானா அதன் வளமான வரலாற்று பாரம்பரியத்துக்காக அறியப்படுகிறது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது.” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
ராகுல் வாழ்த்து: மாநிலங்களின் உருவாக்க தினத்தில் பல்வேறு மாநில மக்களுக்கு தனது வாழ்த்துக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிக்கோபர், சத்தீஸ்கர், சண்டிகர், டெல்லி, ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு மக்களுக்கு மாநில உருவாக்க தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வலிமையான இந்தக் கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், வளமான வரலாறுகள் மற்றும் நீடித்த பாரம்பரியங்களே இந்தியாவின் ஆன்ம பலம், இதுவே நமது தேசத்துக்கு பின்புலமாக உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான பங்களிப்பும் நம்மை ஒன்றாக வைத்திருக்கும் பிணைப்பினை வளப்படுத்துகிறது மற்றும் பலப்படுத்துகிறது என்பதை அங்கீகரித்து இந்த ஒற்றுமையை போற்றி பாதுகாப்போம்” என்று தெரிவித்துள்ளார்.