2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 273 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

சட்டோகிராம்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது.

இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 575 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணி தரப்பில் டோனி சி ஜோர்சி (141 ரன்கள்) ஸ்டப்ஸ் (106 ரன்கள்) மற்றும் முல்டர் (105 ரன்கள்) மூவரும் சதம் அடித்து அசத்தினர். வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 6 ரன்னுடனும், கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ரபடா 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம், தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 159 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மொமினுல் 82 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து பாலோ ஆன் ஆன நிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடிய வங்காளதேசம் முதல் இன்னிங்சை போலவே தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக கேஷவ் மஹராஜ் மற்றும் செனுரன் முத்துசாமி வங்காளதேச பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தினர். முடிவில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 143 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹசன் மக்மூத் 38 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேஷவ் மஹராஜ் 5 விக்கெட்டுகளும், செனுரன் முத்துசாமி 4 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

இதன் மூலம் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்காளதேசத்தை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆக்கி வரலாறு படைத்தது.

டோனி டி ஜோர்சி ஆட்ட நாயகன் விருதையும், ரபடா தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றி அசத்தினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.