நியூயார்க்: 2024-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெற்ற வருவாய் சாதனையை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் நான்கு புதிய புதிய ஆப்பிள் ஸ்டோர்களை திறக்கும் திட்டம் இருப்பதாக ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனையகமாக மும்பையில் உள்ள பிகேசி மும்பை மற்றும் டெல்லியில் உள்ள டிஎல்எஃப் சாகேத் ஆகிய பகுதிகளில் இரண்டு ஆப்பிள் ஸ்டோர்கள் இயங்கி வருகின்றன.
இந்த சூழலில் உலக அளவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதனால் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் விற்பனை மற்றும் வருவாய் நடப்பு காலாண்டில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்பு மற்றும் விற்பனையை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து பகுதியிலும் ஐபோன் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது. இது நமது செப்டம்பர் காலாண்டுக்கான வருவாயில் சாதனையாக அமைந்துள்ளது. அமேரிக்கா, ஐரோப்பா, ஆசியா என அனைத்து பகுதியிலும் இந்த நிலை நிலவுகிறது. இந்தியாவில் கிடைத்துள்ள வரவேற்பு நமக்கு உற்சாகம் தருகிறது” என டிம் குக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிய ஆப்பிள் ஸ்டோர் அமைப்பது குறித்த தகவல் வெகு நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது. இப்போது அதனை டிம் குக் உறுதி செய்துள்ளார். அது எங்கு அமைகிறது என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் பெங்களூரு, புனே, டெல்லி – என்சிஆர் மற்றும் மும்பையில் அமைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.