தென்காசி: 'படிப்புக்காக, இன்னமும் கடன்வாங்க தயார்'- `யோகா சாம்பியனான’ மகளின் கனவுக்காக உருகும் தாய்

“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காா்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு” – எனக்கூறிய வள்ளுவரின் வாக்குப்படி, இன்று ஈட்டும் செல்வத்தை மனமுவந்து பிறருக்கு கொடுப்பதில் கிடைக்கும் மனத்திருப்தி வேறெந்த செயற்கரிய செயலிலும் கிடைப்பதில்லை. குறள்வரிகளுக்கு ஏற்ற உதவிகளை ஒன்றினைத்து, பலத்தரப்பட்ட வறிய நிலை மக்களுக்கும் ‘விகடன் டிரஸ்ட்’ மூலமாக உதவிகள் செய்யப்பட்டுவருகிறது. அந்தவகையில், உயர்கல்விக்கு உதவவேண்டி கோரிக்கையுடன் வந்திருக்கிறார் மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா.

ஹபிபா

மேற்குத்தொடர்ச்சி மலையும், தென்றல் காற்றும் குடிகொண்டிருக்கும் தென்காசி மாவட்டத்தில், இரவண சமுத்திரம்தான் ஹபிபா வசிக்கும் ஊர். கடந்த மார்ச் மாதம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 377 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மிஸ்பா நூருல் ஹபிபா, அடுத்ததாக நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவம் படிக்க உள்ளார். இதற்கான கவுன்சிலிங்கில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் அவருக்கு ‘சீட்’ கிடைத்திருக்கிறது. மருத்துவம் படிக்க வருடத்திற்கு 3.50 லட்சம் செலவாகும் என்ற நிலையில், நலிந்த தனது குடும்ப பொருளாதார சூழலால் முதலாம் ஆண்டு மருத்துவ பயிற்சியில் அடியெடுத்து வைப்பதே அவருக்கு முட்டுக்கட்டையாக மாறியிருக்கிறது.

‘நவம்பர் 4-ந்தேதி முதல் ரெகுலர் வகுப்புகள் ஆரம்பிக்கிறது. இதுவரை, அட்வான்ஸ் ஃபீஸாக 25 ஆயிரத்தை அட்மிஷன்போது செலுத்தியிருக்கிறேன். வகுப்புகள் ஆரம்பிக்கும்போது ஒருவருட கல்விக்கட்டணத்தில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாவாது கட்டணமாக செலுத்த வேண்டும், உதவி செய்யுங்கள் சார்? என கோரிக்கையுடன் வந்து நின்றபோது ஹபிபா முகத்தில் படபடப்பு வேர்வையென கொட்டியது.

சாதனை நிகழ்வில்..

அச்சுக்கோர்த்தார் போல், ஒன்றுவிடாமல் ஆரம்பம் முதல் முடிவு வரை அடுக்கிச்சொன்ன அவர், ‘வீட்டு கஷ்டம் எனக்கு தெரியக்கூடாதுனு அப்பா – அம்மா ஒவ்வொரு விஷயத்தையும் மறைச்சு மறைச்சு செஞ்சாங்க. அதை பாத்துட்டு என்னால, படிக்கிற வேலையை மட்டும் தொடர்ந்து செய்ய முடியல. அதனால தனியார் பள்ளிக்கூடம் வேண்டாம், நான் கவர்மெண்ட் பள்ளிக்கூடத்திலேயே படிக்கிறேன்னு தைரியமா அப்பா-அம்மாக்கிட்ட போய் சொன்னேன். ஆனால் நான்‌ சொன்னதுல, அப்பாவுக்கு துளியும் விருப்பம் இல்லை. இருந்தாலும், வற்புறுத்தி அவரை ஒத்துக்க வச்சேன்’, என பேசியதில் வயதில் பெரியோருக்கான முதிர்ச்சி தெரிந்தது. ஹபிபாவுக்கு 18 வயதுதான்‌, ஆனாலும் வீட்டின் கஷ்டங்களை புரிந்துகொள்வதில் அவருக்கிருக்கும் தெளிவு, ஆச்சர்யப்படவைத்தது.

மாணவி ஹபிபா, கடந்த 2016, 2018-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய அளவிலான‌ யோகா போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றவர். தன் குடும்பத்தின் நலிந்த பொருளாதார சூழலிலும், திறமைக்கு கிடைத்த அங்கீகாரத்தால் பள்ளிக்கல்வியை முழுக்க, முழுக்க ஸ்பான்சர்ஷிப்பில் படித்து முடித்தவர் என்ற தகவல் மட்டும் மாவட்டத்துக்குள் பரவலாக அனைவருக்கும் தெரியும்.

ஹபிபா

இந்த நிலையில், ஹபிபாவை அவரின் இயல்பு சூழ்நிலையில் சந்திக்க இரவணசமுத்திரத்திற்கு புறப்பட்டோம். தென்காசியில் இருந்து சுமார் 20 கி.மீ தூரம். இரவண சமுத்திரம் ஊருக்கு வந்து சேர்ந்தோம். ஊரில் வேறு யாரையும் அடையாளப்படுத்தி முகவரி கேட்பதை விடவும், யோகா சாம்பியன் ‘மிஸ்பா நூருல் ஹபிபா’ வீடு எது என்று கேட்டால் சட்டென கைநீட்டுகிறார்கள் ஊர்காரர்கள். ஊர்மெச்ச பெயர் இருந்தாலும், வீட்டுக்குள் நிலவும் வறுமை அவர்களின்‌ இயலாமையை அப்போதே எடுத்துக்காட்டியது. அப்பா முகமது நஸீருதீன், பெங்களூரூவில் மாதம் 20 ஆயிரம் சம்பளத்தில் வேலைசெய்யும் சாதாரண கூலி தொழிலாளி. அம்மா ஜலீலாஅலி முன்னிஸா, தைராய்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடைக்குட்டி செல்லம் தங்கை ஷாஜிதா ஜைனப், 6ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கு மத்தியில், ஹபிபா, தன் குடும்பத்திற்கு முகவரியாக, தாயின் நம்பிக்கைக்குரிய எதிர்கால மருத்துவராக மின்னிக்கொண்டிருந்தார்.

கோல்டு மெடல்

வீடுகள் நெருக்கமான இடத்தில், சுற்றிலும் சொந்தபந்தம், நண்பர்கள், நலன்விரும்பிகள் என மொத்த ஊரையும் தன் வெற்றியால் வசியப்படுத்தி வைத்திருந்த மிஸ்பா நூருல் ஹபிபா பேசுகையில், “எங்க அப்பா- அம்மா கல்யாணமாகி பெங்களூரில் குடியிருந்தாங்க. நான் பிறந்து ஆறு வயசுவரையும் பெங்களூரில் தான் வளர்ந்தேன். பெங்களூரில் 1-ம் வகுப்பு படிச்சபோ, எங்க அம்மா உடல்நிலை (தைராய்டு பிரச்னையால) பாதிக்கப்பட்டாங்க. மளிகைக்கடையில் மாத சம்பளத்துக்கு வேலை பார்த்த எங்க அப்பாவால், அப்போ இந்த மருத்துவ செலவுகளை கவனிக்க முடியல. எனவே எனது சொந்த தாய்மாமா, என்னையும், அம்மாவையும் சொந்த ஊரான தென்காசி மாவட்டம், கடையம் அடுத்த இரவண சமுத்திரத்திரத்திற்கு கூட்டிட்டுவந்தார். சொந்த வீடு, நிலம் எதுவும் கிடையாது. ஊருக்கு வந்தா எங்க தங்குறது, என்ன செய்யப் போகிறோம்னு எந்த யோசனையும் இல்லை.

யோகாசனம்

மருத்துவம் பார்க்கணும், செலவை குறைக்கணும் இந்த ரெண்டு எண்ணத்துல மாமாவோட , அம்மா என்னை கூட்டிக்கிட்டு இங்க வந்துட்டாங்க. மாமா, வெளிமாநிலத்தில் சொந்தமா நடமாடும் டிபன் கடை நடத்திவந்தார். எனவே, ஆதரவுக்காக எங்க சொந்த ஊரான இரவணசமுத்திரத்திரத்துல அவங்க வீட்டுலேயே தங்கிட்டோம். அம்மாவுக்கும் பக்கத்துல உள்ள அரசு ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க, அது சரி வராத நிலையில் மற்ற ஆஸ்பத்திரியை நாடவேண்டிய சூழல் வந்தது. இதையடுத்து, என்னை ஸ்கூல்ல சேர்க்க முயற்சி நடந்துச்சு, அப்போதான் எங்க மாமா வருடத்திற்கு 22 ஆயிரம் ரூபாய் ஃபீஸ் கட்டி குற்றாலத்தில் உள்ள தனியார் ஸ்கூல்ல என்னை இரண்டாம் வகுப்புல சேர்த்தாங்க. அங்கு எனக்கு அறிமுகமானவர்தான் யோகா கோச் குரு கண்ணன். பள்ளிக்கூடத்துல திறன் வளர்ப்பு பயிற்சியாத்தான் யோகா வகுப்புக்கு போனேன். அதுல இருந்த ஆர்வத்தால் யோகா போட்டிகளில் தொடர் பரிசுகளை வாங்குனேன். அடுத்தடுத்து மாவட்டம், மண்டலம், மாநிலம் என ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிதான். இந்தநிலையில் நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது, 2016-ல் தாய்லாந்துல ஆசிய அளவிலான யோகா போட்டி நடந்துச்சு. இதில் கலந்துக்க வாய்ப்புகள் இருந்தபோதும், வீட்டுல இருந்த பணக்கஷ்டத்தால என்னை போட்டிக்கு அனுப்புறதுக்கு எல்லோருக்கும் தயக்கம் இருந்துச்சு. அந்தசமயத்துல யோகா கோச் குரு கண்ணன்தான், என் வீட்டு ஆட்களை சமாதானப்படுத்தினார்.

தாய்லாந்து நாட்டிற்கு என்னுடைய பயணச் செலவுக்காக அப்பா, மாமா ரெண்டு பேரும் தனித்தனியா ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்குனாங்க மற்றும் ஊர் ஜமாத்தார்கள் மூலமாகவும் உதவுனாங்க. அந்தப்போட்டியில் நான் கோல்டு மெடல் வின் பண்ணேன். இதுதான்‌ என்னுடைய முதல் பெரியவெற்றி. விஷயம் தெரிஞ்சு, பட்டக்கடனுக்கு பலன் கிடைச்சுருக்குனு அப்பாவும், மாமாவும் சந்தோஷப்பட்டாங்க. ஆனால் அங்கதான் திருப்புமுனையும் உண்டாச்சு. வீட்டுல இருந்த பணக்கஷ்டம் எங்க கழுத்தை நெரிச்சுது.

கோல்டு மெடல்

மாமாவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடையை இழுத்து மூடினார். வேறொரு பெரிய கடையில் கூலி ஆளாக வேலைக்கு சேர்ந்தார்‌. அப்போ எனது படிப்புக்காக வருஷத்துக்கு 35 ஆயிரம் ரூபாய் ஃபீஸ் கட்டிட்டு இருந்தாங்க. வீட்டுல அம்மா மருத்துவ செலவு, வீட்டு செலவு, என்னுடைய படிப்பு செலவு, இதர செலவுனு எல்லாத்தையும் நேர்செய்வதில் சிரமம் இருந்துச்சு. அதனால ஐந்தாம் வகுப்போடு தனியார் பள்ளியில் எனது படிப்பை நிறுத்திவிட்டு, ஆறாம் வகுப்பு முதல் அருகே உள்ள அரசுப்பள்ளியில் படிப்பை தொடரலாம்னு அம்மா ஐடியா சொன்னாங்க. இதனால அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கருத்துமுரண் ஏற்பட்டுச்சு.

தங்கையுடன்..

வீட்டுக்கஷ்டம் எனக்கு தெரியக்கூடாதுனு, அதுவரைக்கும் அப்பா-அம்மா ஒவ்வொரு விஷயத்தையும் மறைச்சு, மறைச்சு செஞ்சாங்க. ஆனால் அவங்களோட இயலாமையை கண்கூட பாத்துட்டு, என்னால எனக்கு புடிச்ச மாதிரி ஸ்கூல்ல படிக்க மனசுவரல. அதனால தனியார் பள்ளிக்கூடம் வேண்டாம், நான் கவர்மெண்ட் பள்ளிக்கூடத்திலேயே படிக்கிறேன்னு தைரியமா போய் அப்பா-அம்மாவிடம் சொன்னேன். ஆனாலும் அப்பா ஒத்துக்கவே இல்லை. இருந்தாலும், வற்புறுத்தி அவரை ஒத்துக்க வச்சேன். தொடர்ந்து எனக்கு டி.சி.வாங்க பள்ளி நிர்வாகத்திடம் பேசுனாங்க. அப்போதான், எங்களது குடும்ப ஏழ்மைசூழல் அறிந்து மேலும் என்னை ஊக்குவிக்கும் விதம் 12-ம் வகுப்பு வரை எனக்கு ஆகும் கல்விச்செலவு எல்லாத்தையும் பள்ளி நிர்வாகமே ஏத்துக்குறதா உறுதி குடுத்தாங்க. இதனால் கவலையில்லாமல் மறுபடியும் அந்த பள்ளியிலேயே தொடர்ந்து படிச்சேன்.

பாராட்டு சான்றிதழ்கள்

இதற்கடுத்து 2018-ம் ஆண்டு மீண்டும் ஆசிய அளவிலான யோகா போட்டிக்கு தாய்லாந்து போயி கோல்டு மெடல் வின் பண்ணேன். இதற்கிடையில் என்னை பார்த்து ஆர்வமான தங்கை ஷாஜிதா ஜைனப் என்னுடன் சேர்ந்து யோகாவில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிச்சோம், போட்டிகள் மட்டுமில்லாமல் யோகா, ரோலர் ஸ்கேட்டிங் மூலமாக பல சமூக விழிப்புணர்வுகளில் தொடர்ந்து இன்னாள் வரைக்கும் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு பலனாக எனது தங்கைக்கும் ஸ்காலர்ஷிப்பில் பள்ளி நிர்வாகம் சலுகை கட்டணம் கொடுத்திருக்கு. கடந்த மார்ச் மாதம்தான் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினேன். பிளஸ்-டூ ரிசல்ட்டில் 377 மார்க் வாங்கியிருக்கேன்.

எனக்கு டாக்டராகி என்னைப்போன்ற எளியவர்களுக்கு சேவை செய்யணும்னு லட்சியம். இந்த கனவை கஷ்டப்பட்டாவது நிறைவேத்தனும்னு எனது அப்பா, அம்மா நினைச்சாங்க. இதுக்காக, கடந்த மே மாதம் (05.2024) நடந்த ‘நீட் எக்ஸாம்’ எழுதுனேன். தேர்வு முடிவில் 100 மதிப்பெண் கிடைச்சுது. மருத்துவம் படிக்கிறதுக்கு இந்த மார்க் போதுமானதா இல்லை. அதனால எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்குற யோகாவையும், மருத்துவத்தையும் பேலன்ஸ் பன்ற மாதிரி ‘யோகா அன்ட் நேச்ரோபதி மெடிக்கல் சயின்ஸ்(BNYS)’ படிக்க முடிவு செஞ்சேன். இதுக்கான கவுன்சிலிங்கில், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் எனக்கு சீட் கிடைச்சது. இந்த சூழ்நிலையில்தான், வறுமை என்னை உதவிக்கேட்டு ஓடவச்சிருக்கு. கவுன்சிலிங்கில் அட்வான்ஸ் டியூஷன் ஃபீஸாக ரூ.26 ஆயிரம் கட்டினேன். அதுவே, எங்களுக்கு பெரிய மலையா தெரிஞ்சுது. இருந்தாலும், நான் படிக்கனுங்கிறதுக்காக அம்மா அவங்ககிட்ட இருக்குற‌ கடைசி கம்மல் தோடு அடகு வைச்சு பணம் கொடுத்தாங்க. அதில் கிடைச்ச பணத்துலதான் டியூஷன் ஃபீஸ் கட்டிருக்கேன்.

குழுவினருடன்..

ஒரு வருஷ காலேஜ் ஃபீஸ் 3.50 லட்சம் ரூபாய். இதுல 2.75 லட்சம் படிப்புக்காக மட்டும் கொடுக்கணும். மீதமுள்ள தொகை ஹாஸ்டல், மெஸ் ஃபீஸ் கட்டணமா செலுத்தனும். 5 ½ வருஷம் படிப்பை முடிக்கிறதுக்கு தோராயமாக 15 முதல் 19 லட்சம் ரூபாய் தேவைப்படுது. இதுல என் குடும்பத்தோட பங்களிப்பா தரமுடிஞ்சது எங்க அம்மாவோட நகைதான். அதைக்கடந்து கடன் வாங்குறதுக்கும், அடகு வைக்கிறதுக்கும் எங்கக்கிட்ட தெம்பு இல்லை. எனவே, படிப்புக்கு நாங்க உதவிசெய்றோம்னு பேசிய, பல தொண்டு நிறுவனங்கள், ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட எல்லா அரசியல் கட்சியில உள்ளவங்களையும் சந்திச்சேன். ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறவங்க கிட்டேயும் கோரிக்கை மனு கொடுத்தேன். ஆனால் பதில் வர தாமதமாகிட்டே இருக்கு. இதுவரை வேறெந்த உதவியும் கிடைக்கல. காலேஜ் வகுப்பு ஆரம்பிக்கிற தேதி நெருங்கிடுச்சு. அதை நினைக்கும்போது, ஒவ்வொரு நாளும் வயித்துல புளியை கரைச்ச மாதிரி நகர்ந்து போகுது, என்னுடைய படிப்பு பயணம்” என பயத்துடன் பேசினார்.

ஹபிபாவின் தாய் ஜலீலாஅலி முன்னீஸா, ” பெத்தவங்க கஷ்டம் தெரியாம பிள்ளைக வளர்றது தவறு. பசங்களுக்கு ஒருவிஷயத்தை செய்து கொடுக்கிறதுக்கு, பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு அவங்களுக்கு கட்டாயம் தெரியணும். அதுக்காகவே, வீட்டுக்குள்ள நடக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அவ கண்ணு முன்னாடியே செய்வோம். ஹபிபா எங்களை புரிஞ்சுக்குற மாதிரி, இப்ப சின்னவளும் எங்களை புரிஞ்சிக்கிறா. பெத்த பிள்ளைங்க நல்லா வாழ்றதுக்கான ஒரு வழித்தடத்தை உருவாக்கி கொடுக்கிறதுக்குத்தான் தகப்பனும் தாயும் இத்தனை போராட்டத்தை சந்திக்கிறோம். இது எல்லாத்தையும் சரிகட்ட சரியான வழி கல்விதான். அந்தவழியில அவங்களை எவ்வளவு ஒசரத்துக்கு கொண்டுபோக முடியுமோ அவ்ளோ ஒசரத்துக்கு கொண்டு போயிடனும்யா. ஹபிபா, யோகா போட்டிக்காக வெளிநாடு போகனும்னு சொன்னப்போ என்னோட நகை சிலது வித்துட்டேன். சொந்தக்காரங்க, அவளுக்காக கொடுத்த நகையை அடகு வச்சேன். இப்படி, ஒவ்வொரு முறையும் கடன் வாங்கித்தான் காரியத்தை முடிச்சேன்.

குடும்பத்துடன்..

இதனால நான் பட்ட ஏளன பேச்செல்லாம் ஏராளம். அவள், ஒவ்வொரு முறையும் யோகா போட்டிக்கு போகும்போதெல்லாம் ‘பொட்ட புள்ளைய சர்க்கஸ் காமிக்கிறதுக்கு அனுப்புறா பாருனு’ ஊர்ல என் காதுபடவே கேவலமா பேசினாங்க. ஆனா, அதே பொண்ணு ‘கோல்ட் மெடல்’ வாங்கினதும், ‘புள்ளைய எப்படி வளத்துருக்கா பாருன்னு’ பொறாமையா சொன்னாங்க. இந்த மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது அவளோட கல்விதான். அதனால படிப்பு சம்பந்தமா அவள் என்ன கேட்டாலும் செஞ்சு கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு இன்னமும் கடன் வாங்கி செய்யவும் தயாரா இருக்கேன்யா” என மகளை தெம்பூட்டி பேசினார் முன்னிஸா.

வாசகர்களின் கவனத்துக்கு…

ஐஸ்வர்யாவுக்கு உதவ விருப்பம் தெரிவிக்கும் வாசகர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.