புதுடெல்லி: நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை தவறாக வழிநடத்தியற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி சங்கர் பிரசாத், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்றும், மீறினால் திவால் நிலை ஏற்படும் என்றும், மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்றும் மல்லிகார்ஜுன கார்கே இன்று (நவ.1) கூறியுள்ளார். இதன் மூலம், மக்களை தவறாக வழிநடத்தியதை காங்கிரஸ் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.
கர்நாடகாவில் அமலில் உள்ள பெண்களுக்கான இலவச பேருந்துப் பயண திட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து அம்மாநில காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், இமாச்சலப் பிரதேச அரசு சம்பளத்தை வங்கியில் இருந்து எடுக்க வேண்டாம் என அரசு ஊழியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் நடந்ததற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும், ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
மகாராஷ்டிரா காங்கிரஸுக்கு கூறிய பாடத்தை, மல்லிகார்ஜுன் கார்கே ராகுல் காந்திக்கு கற்பிப்பாரா? வாக்குறுதிகளை வெளியிடுவதில் ராகுல் காந்தி வல்லவர். வெறும் அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களை முட்டாளாக்கக் கூடியவர். தெலங்கானா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் என எல்லா மாநிலங்களிலும் வாக்காளர்களை தவறாக வழிநடத்தியவர். அதை ஹரியானா மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டின. இண்டியா கூட்டணி மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டிலும் இதேபோல் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை தவறாக வழிநடத்த காங்கிரஸ் முயலும்.
11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்குவதாக நாங்கள் உறுதியளித்தோம். அதனை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறோம். அதேபோல், 80 கோடி மக்களுக்கு மாதம் தோறும் 5 கிலோ கோதுமை மற்றும் அரிசியை வழங்கும் வாக்குறுதியையும் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். டிஜிட்டல் இந்தியா பற்றி நாங்கள் என்ன பேசினோமோ அது நிஜமாகிவிட்டது. டிஜிட்டல் பேமெண்ட்டுகள் பரவலாகிவிட்டன. இந்த அனைத்து முயற்சிகளாலும், இந்தியாவில் வறுமை கணிசமாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன” என தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்துள்ளேன். உங்களால் முடிந்த அளவு மட்டும் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். 5, 6, 10 அல்லது 20 உத்தரவாதங்களை அறிவிக்கக் கூடாது என்று கூறியுள்ளேன்.
நிதி ஆதாரத்தின் அடிப்படையில் உத்தரவாதங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில், திவால் நிலை ஏற்படும். சாலைகள் போடுவதற்கு பணம் இல்லை என்றால், மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். அரசாங்கம் தோல்வியுற்றால், வருங்கால சந்ததியினருக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும்” எனத் தெரிவித்திருந்தார்.