சென்னை: “தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களை இன்னாளில் நினைவுகூர்வோம்” என தமிழ்நாடு தினத்துக்கு தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “1956-ல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களை இன்னாளில் நினைவுகூர்வோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.