கடவுச்சீட்டு கொள்வனவுக்காக டென்டர் வழங்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் ‘P’ வகையின் கீழான வெற்றுக் கடவுச்சீட்டுக்கள் 50,000 தற்போது நிணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இந்தத் தொகைக்கு மேலதிகமாக நவம்பர் மாத இறுதியில் மேலும் 100,000 வெற்றுக் கடவுச்சீட்டுக்களும் டிசம்பர் மாதத்தில் மேலும் 150,000 கடவுச்சீட்டுக்களும் என 750,000 கடவுச்சீட்டுக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ளன. அதே நேரம் மேலும் வெற்றுக் கடவுச்சீட்டுத் தொகையொன்றை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் நாளாந்தம் 1,600 கடவுச்சீட்டுக்கள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து அந்தத் தொகையை படிப்படியாக அதிகரித்து விண்ணப்பதாரர்களினால் கோரப்படும் கடவுச்சீட்டுக்களின் அளவுக்கு ஏற்ற விதத்தில் கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கான முறையொன்றை தயாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாளொன்றையும் நேரத்தையும் இணைய வழி ஊடாக (Online) ஒதுக்கிக்கொள்வதற்கான முறையொன்றைத் தயாரிப்பதற்கு தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, அந்த முறையை மிக விரைவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.