சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் சென்று சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – காட்டாங்கொளத்தூர் இடையே நாளை மறுநாள் (திங்கள்) 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் வெளியூர் சென்றுள்ளனர். இவர்கள் விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (நவ.4) அதிகாலை முதல் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிகளவில் வந்து இறங்கும் பயணிகள், மாநகர பேருந்துகள், ரயில்களில் பயணம் செய்து தங்களது இருப்பிடங்களுக்கு செல்வார்கள். எனவே, சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக, வழக்கத்தைவிட கூடுதல் மின்சார ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காட்டாங்கொளத்தூரில் 4-ம் தேதி அதிகாலை 4, 4.30, 5, 5.45, 6.20 மணிக்கு தாம்பரத்துக்கு கூடுதல் மின்சார சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன. அதேபோல், தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.05, 5.40 மணிக்கு காட்டாங்கொளத்தூருக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த ரயில்கள், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயில்: அதேபோல், ராமநாதபுரம் – தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்(06162) நாளை (நவ.3) ராமநாதபுரத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்குபுறப்பட்டு, அன்று இரவு 11.40 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயிலில் 2 முன்பதிவு கொண்ட 2-ம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 11 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இடம்பெற்றிருக்கும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.