IPL 2025 Mega Auction Latest News Updates: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு 10 அணிகளும் தங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அக். 31ஆம் தேதி வெளியிட்டன. பல அணிகளின் முடிவு ரசிகர்களையும், கிரிக்கெட் ஆர்வலர்களையும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கழட்டிவிட்டுள்ளது. இவரை போன்று ஆர்சிபி அதன் கேப்டன் டூ பிளெசிஸையும், லக்னோ அணி அதன் கேப்டன் கேஎல் ராகுலையும், பஞ்சாப் அணி அதன் கேப்டன்கள் ஷிகர் தவாண், சாம் கரன் ஆகியோரையும் விடுவித்துள்ளது. ஆனால் இவை அனைத்தையும் விட பெரிய அதிர்ச்சிக்கரமான அறிவிப்பு என்றால் டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) அதன் கேப்டனாகவும், முக்கிய முகமாகவும் இருந்த ரிஷப் பண்டை விடுவித்தது பலராலும் இன்னும் நம்ப முடியவில்லை எனலாம்.
ரிஷப் பண்ட்டும்… டெல்லி அணியும்…
2016ஆம் ஆண்டில் இருந்து டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் (Rishabh Pant) விளையாடி வருகிறார். 2021ஆம் ஆண்டில் ரிஷப் பண்டின் கைகளுக்கு டெல்லியின் கேப்டன்ஸி வந்தது. 2020ஆம் ஆண்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு முக்கிய காரணங்களுள் ஒருவரும் ரிஷப் பண்ட்தான். 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் அணிகளுக்கான மேசையில் ரிஷப் பண்ட்டும் கலந்துகொண்டு வீரர்களை ஏலம் எடுத்தது இன்றும் பலராலும் மறக்க முடியாது.
கார் விபத்து காரணமாக 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனை ரிஷப் பண்ட் விளையாடவில்லை. இருந்தாலும் அந்த அணி அவருக்கு முழு ஆதரவையும் அளித்து 2024 சீசனுக்கு வந்த உடன் டேவிட் வார்னரிடம் இருந்த கேப்டன்ஸியை அப்படியே ரிஷப் பண்ட்டுக்கு தூக்கிக் கொடுத்தது. கடந்த இரண்டு மெகா ஏலத்திற்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பண்டை தக்கவைத்ததும் குறிப்பிடத்தக்கது.
9 வருட உறவு முறிவு…
இப்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும், ரிஷப் பண்ட்டுக்கும் இருந்த 9 வருட பிணைப்பு முறிவுக்கும், அவர் வெளியேற்றப்பட்டதற்கும் காரணம் என்ன என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து வெளியேற இருக்கிறார் என முன்னரே தகவல்கள் கசிந்தன. அதுமட்டுமின்றி, கடந்த அக். 12ஆம் தேதி நள்ளிரவில் ரிஷப் பண்ட் அவரது X பக்கத்தில் போட்ட பதிவும் அவர் வெளியேற இருப்பதை ஏறத்தாழ உறுதிசெய்தது எனலாம். அந்த பதிவில் அவர்,”நான் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால், ஏலம் போவேனா போகமாட்டேனா… ஏலம் போனால் எவ்வளவு தொகைக்கு போவேன்?” என குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணி (Delhi Capitals Retention 2025) முதலாவதாக அக்சர் பட்டேலை ரூ.16.50 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அவரை தொடர்ந்து குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரெல் (ரூ.4 கோடி) மொத்தம் நான்கு பேரை ரூ.47 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது. இன்னும் இரண்டு Capped வீரர்களை ஏலத்தில் அந்த அணியால் தக்கவைக்க முடியும், 2 RTM உள்ளது. அவர்களின் கையில் ரூ.73 கோடி உள்ளதால் நட்சத்திர வீரர்களையும் அவர்களால் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்க முடியும்.
ரிஷப் பண்ட் வெளியே வர என்ன காரணம்?
இந்நிலையில், ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. டெல்லி அணியில் சில நாள்களுக்கு முன்னர் பெரிய மாற்றங்கள் நடைபெற்றன. ஏழு வருடங்களாக தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டார். அணியின் இயக்குநராக இருந்த சௌரவ் கங்குலியும் மாற்றப்பட்டார். அவர்களுக்கு பதில் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியும், இயக்குநராக வேணுகோபால் ராவ்வும் தற்போது பொறுப்பேற்றுள்ளனர். இதில்தான் ரிஷப் பண்ட்டுக்கும், டெல்லி அணி உரிமையாளர்களுக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி JSW குழுமம், GMR குழுமம் என இரண்டு உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. சரிசமமாக இரு குழுமங்களும் அந்த அணியை நிர்வகிக்கின்றன. இரண்டு ஆண்டுகள் JSW குழுமம் நிர்வகித்தால், அடுத்த இரண்டு ஆண்டுகள் GMR குழுமம் அணியை நிர்வகிக்கும். அந்த வகையில் கடந்த இரண்டு சீசனை JSW குழுமம் நிர்வகித்தது, அடுத்த 2025, 2026 சீசனை GMR குழுமம் நிர்வகிக்க உள்ளது.
தற்போது இந்த பயிற்சியாளர்கள் மாற்றத்தையும் GMR குழுமமே மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த GMR குழுமத்துடன்தான் ரிஷப் பண்ட்டுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன்ஸியை ரிஷப் பண்ட்டிடம் இருந்து பெற்று அதை அக்சர் பட்டேலிடம் ஒப்படைக்க இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பஞ்சாப் கிங்ஸில் ரிஷப் பண்ட்?
இந்த காரணங்களாலேயே ரிஷப் பண்ட்டுக்கும், அணிக்கும் உறவு முறிவு ஏற்பட்டிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. வரும் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் பஞ்சாப் கிங்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்படலாம். பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் வந்துள்ளார் என்பதால் அவர் ரிஷப் பண்டை எடுக்க நிச்சயம் பெரியளவில் ஆர்வம் காட்டுவார்.