மும்பை,
இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 86 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கில் 31 ரன்களுடனும், பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இந்த போட்டியில் எடுத்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த 5வது வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்தார்.
இந்நிலையில் அந்த சாதனையைப் பற்றி தாம் அறியவில்லை என்று தெரிவிக்கும் ஜடேஜா முதல் நாள் மாலையில் இந்தியா கொஞ்சம் பேட்டிங்கை சரிவை சந்தித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதை பார்ட்னர்ஷிப் அமைத்து சரி செய்வோம் என்று தெரிவிக்கும் ஜடேஜா இது பற்றி பேசியது பின்வருமாறு:-
“இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் எடுப்பது எப்போதும் சிறப்பு. என்னுடைய அணிக்காக விக்கெட்டுகளை எடுத்து உதவியது நல்ல உணர்வை கொடுக்கிறது. வெயிலில் பந்து வீசுவது எளிதாக இல்லை. வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசினார். அனைவரும் தங்களுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்ததாக பேட்டிங் துறையில் நாங்கள் அணியாக சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
இப்போட்டியில் படைத்த சாதனை பற்றி எனக்குத் தெரியாது. விளையாடாத நேரங்களில் மட்டுமே நான் சாதனைகளைப் பற்றி பார்ப்பேன். அந்த விக்கெட்களை எடுத்தது நல்லது. இங்கே நீங்கள் மெதுவாக பந்து வீச முடியாது. ஏனெனில் வேகம் இருக்கிறது ஆனால் பெரிய பவுன்ஸ் இல்லை. முதல் நாள் மாலையில் தவறான தொடர்பு மற்றும் மதிப்பீடு காரணமாக எதிர்பாராத சரிவு ஏற்பட்டது. இன்னும் 150 ரன்கள் பின்தங்கியுள்ள நாங்கள் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்து 235 ரன்களை தாண்டுவோம் என்பதே எங்களது திட்டமாகும்” என்று கூறினார்.