பஞ்சாப் அணி நிர்வாகத்திற்கு நன்றி கடன் பட்டுள்ளேன் – ஷசாங் சிங்

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மெகா ஏலம் இந்த மாதம் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (அக்டோபர் 31-ந் தேதி) மாலை 5 மணிக்குள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை அறிவித்துவிட்டன.

இதில் பஞ்சாப் அணி ஷசாங் சிங் (ரூ.5½ கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ.4 கோடி) ஆகிய 2 வீரர்களை மட்டுமே தக்கவைத்து விட்டு பொறுப்பு கேப்டன் சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டன், ககிசோ ரபடா உள்ளிட்டோரை கழற்றி விட்டுள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் கைவசம் ரூ.110½ கோடி உள்ளது.

கடந்த சீசனில் மற்றொரு வீரருக்கு பதிலாக தவறுதலாக பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட ஷசாங் சிங் இம்முறை அந்த அணியாலயே ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் 14 போட்டிகளில் களமிறங்கிய ஷஷாங்க் சிங் 354 ரன்களை விளாசி பலரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் அவரை மீண்டும் பஞ்சாப் தக்க வைத்துள்ளது.

இதுகுறித்து ஷசாங் சிங் பேசுகையில், “பஞ்சாப் அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி கடன் பட்டுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறேன்.

ஆனால் ஒருமுறை கூட யாரும் என்னை ரீடெய்ன் செய்ததில்லை. இதற்காகவே பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனது ஆட்டத்தை அடுத்த சீசனில் மேம்படுத்தி அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக களத்தில் 100% உழைப்பை கொடுக்க வேண்டும். பஞ்சாப் கிங்ஸ் அணி வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு இரண்டு மடங்கு உழைப்பை கொடுத்து ரன்களை குவிக்க வேண்டும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.