செப்டம்பர் மாதம், சென்னை நகரில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, புதிய சாதனையைப் படைத்தவர் தென்காசி மாவட்டம், கல்லூத்தைச் சேர்ந்த அபிநயா. இவர் முந்தைய சாதனையான 11.92 வினாடிகளை முறியடித்து, 11.77 வினாடியில் ஓடி, சாதனை படைத்தார்.
அபிநயாவின் தந்தை இராஜராஜன் விவசாயி, தாயார் சங்கவி வீட்டில் இருப்பவர். அவர்களின் குடும்பம் கல்லூத்து கிராமத்தில் வசிக்கிறது. ஆனால் விளையாட்டுப் பயிற்சிக்குத் தேவையான வசதிகள் அங்கு இல்லை. எனவே, அபிநயா மற்றும் அவரது குடும்பம் திருநெல்வேலியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருக்கின்றனர் .
அபிநாயாவின் இந்த சாதனை குறித்து அவரின் தந்தை ராஜராஜன் கூறுகையில், “அபிநயா தற்போது சென்னையில் தனது கல்லூரி படிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறாள். எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம், கல்லூத்து கிராமம். எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். எனது பிள்ளைகள் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்பொழுது என்னுடைய மகள் 100 மீட்டர் தெற்காசியத் தடகளப் போட்டியில் ரெக்கார்டு கிரியேட் பண்ணி இருக்காங்க. இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கு.
கல்லூத்து கிராமத்தில் போதுமான அளவு போக்குவரத்து வசதி இல்லை, எனவே அபிநயாவின் தடகளப் பயிற்சிக்காக நாங்கள் குடும்பத்துடன் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினோம். இந்த முடிவு எடுத்தபோது எனது குடும்பத்தினர் அனைவரும் என்னை எதிர்த்தனர்.
திருநெல்வேலிக்கு வந்த பின் நடைபெற்ற மூன்று போட்டிகளில் தொடர்ந்து அபிநயா தோல்வியைச் சந்தித்தார். ஆனால் நான் அபிநயாவை முழுவதுமாக நம்பினேன். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், அபிநயா எடுத்த தொடர் பயிற்சியின் காரணமாகவும், அபிநயா பங்கேற்ற நான்காவது போட்டியில் தங்கம் வென்றார்.
திண்டுக்கல்லில் அபிநயா பங்கேற்ற முதல் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் என்ற நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது.
அபிநயா தொடர்ந்து தடகளப் பயிற்சி மேற்கொள்வதற்கு அவள் படித்த பள்ளியின் ஆதரவு அளப்பரியது. அவளுக்கென்று தனியாக ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தினார்கள்.
ஒருமுறை வடமாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்கச் சென்றபோது அபிநயாவுக்கு காய்ச்சல் ஏற்பட்ட போதும், அவள் போட்டியில் பங்கேற்றாள். போட்டியின் முடிவில் அவள் தரையில் விழுந்து விட்டாள். அப்பொழுது அபிநயாவின் நாடி துடிப்பு குறைந்துவிட்டது. பின்பு தொடர் சிகிச்சைக்குப் பின் அவள் குணமடைந்து விட்டாள். இந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது.
தொடர்ந்து தடகளப் பயிற்சி மேற்கொண்டாலும் அபிநயா எப்பொழுதும் படிப்பின் மீதான கவனத்தை விடவில்லை. பொம்பள பிள்ளையை இப்படி வெளியே விளையாட விடுறது சரியானு கேட்ட ஊர் மக்கள், இன்னைக்கு… ஊர் திருவிழாவிற்கு அபிநயா ஊருக்கு வரலையான்னு கேட்குற அளவுக்கு என் பொண்ணு வளர்ந்து இருக்கிறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
அபிநயாவின் முதல் தடகள போட்டி தொடங்கி செப்டம்பர் மாதம் நடைபெற்ற தெற்காசியத் தடகள போட்டி வரை அனைத்து போட்டிகளிலும் எனது மகள் என்னைப் பெருமைப்பட வைத்திருக்கிறாள்.
பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ள எனது மகளின் அடுத்தகட்ட இலக்கு 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பது, அதற்காக அவள் இப்பொழுது கடினமாக உழைத்து வருகிறாள். நாங்கள் பட்ட கஷ்டங்கள் வீண் போகலை… எங்கள் பிள்ளை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறாள்” என்றார்.
அபிநயா தடகள போட்டியில் உலக அளவில் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துகளைப் பகிர்வோம்!