புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அரசியல் செய்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா, “இதுபோன்ற உணர்வுபூர்வமான பிரச்சினையில் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்காமல், அரசியலுக்கும், குடும்பத்துக்கும், வாக்கு வங்கிக்கும் முன்னுரிமை கொடுப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஃபரூக் அப்துல்லா தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க இந்திய ராணுவத்தையும், இந்திய ஏஜென்சிகளையும் குறை கூறுவதை ஏற்க முடியாது. ஆனால், காங்கிரஸுக்கும், ஜம்மு – காஷ்மீரில் ஆட்சியில் இருக்கும் சூழலுக்கும் இது ஒரு பழக்கமாகிவிட்டது. ஏனென்றால், 26/11 வழக்கில் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் காங்கிரஸ் நற்சான்றிதழ் கொடுத்தது. இப்போது அதே செயல் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை ஸ்ரீநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஃபரூக் அப்துல்லா, “புட்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களை உயிரோடு பிடிக்க வேண்டும். அவர்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஒமர் அப்துல்லா அரசை வீழ்த்த சதி நடக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்” என தெரிவித்திருந்தார். அதாவது, பயங்கரவாதிகளைக் கொல்வதற்கு பதிலாக அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும் என்றும், இந்த மோதல் சம்பவங்களில் தனக்கு சந்தேகம் இருக்கிறது என்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா கூறியிருப்பது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் மகம் பகுதியில் வெளியூரைச் சேர்ந்த இருவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடல்நிலை சார்ந்த ஆபத்து ஏதும் இல்லை என்றும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சரத் பவார் கருத்து: ஃபரூக் அப்துல்லா கருத்து தொடர்பாக தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரின் மிகப்பெரும் ஆளுமை ஃபரூக் அப்துல்லா. ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக தனது வாழ்நாளை செலவிட்டவர். அவருடைய நேர்மை குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் கூறுவதை மத்திய அரசு, குறிப்பாக உள்துறை அமைச்சகம் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். காஷ்மீர் சூழலை எப்படி சரிசெய்வது என்பது குறித்து ஆராய வேண்டும்” என்றார்.
2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: இதனிடையே, தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், ஷாங்குஸ்-லார்னூ பகுதியில் உள்ள ஹல்கன் காலி அருகே தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் இன்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் உள்ளூர் நபர் எனவும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் மற்றொரு மோதல் சம்பவம் நடைபெற்றது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.