இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. முதல் நாளில் இந்திய அணி சொதப்பி சரிவை எதிர்கொண்டிருந்த நிலையில் இரண்டாம் நாளில் இந்தியா சிறப்பாக ஆடியிருக்கிறது.
முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்திய அணியும் நேற்றே தங்களின் முதல் இன்னிங்ஸை தொடங்கிவிட்டது. நேற்றைய நாளின் முடிவில் 19 ஓவர்களில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தது. ரோஹித், கோலி, ஜெய்ஸ்வால் என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்திருந்தனர். கில்லும் பண்ட்டும் க்ரீஸில் நின்றிருந்தனர். இருவரும் இன்றைய நாள் ஆட்டத்தை நன்றாக தொடங்கியிருந்தனர். அஜாஷ் படேல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையே பவுண்டரியுடன்தான் பண்ட் தொடங்கினார். தொடர்ந்து அதிரடியாகவே ஆடினார்.
குறிப்பாக அஜாஷ் படேலின் பந்துகளை குறிவைத்து எல்லைக்கோட்டை நோக்கி அனுப்பினார். கில்லும் திடகாத்திரமாக நின்று ஆடினார். இருவருக்கும் அதிர்ஷ்டமும் கைகொடுத்தது. கில் 45 ரன்களில் இருந்தபோதும் பண்ட் 53 ரன்களில் இருந்தபோதும் கொடுக்கப்பட்ட கேட்ச் வாய்ப்புகளை நியூசிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். கில் நின்று ஆடி 90 ரன்கள் வரை சேர்த்தார். பண்ட் 60 ரன்களை சேர்த்து இஷ் சோதியின் பந்தில் அவுட் ஆக, கில் அஜாஷ் படேலின் பந்தில் அவுட் ஆனார். இதன்பிறகு, வாஷிங்டன் சுந்தர் மட்டும் கொஞ்சம் அதிரடியாக 38 ரன்களை சேர்த்தார். இந்திய அணி 28 ரன்கள் முன்னிலை பெற்றது. நியூசிலாந்து அணி தங்களின் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. வழக்கம்போல இந்திய பௌலர்கள் சிறப்பாக வீசி நியூசிலாந்து பேட்டர்களை திணறடித்தனர்.
முதல் ஓவரிலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லேதமை ஆகாஷ் தீப் ஒரு இன்கம்மிங் டெலிவரியை வீசி க்ளீன் போல்டாக்கினார். இதன்பிறகு ஆட்டத்தை இந்திய ஸ்பின்னர்கள் தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல் இன்னிங்ஸை போலவே இங்கேயும் சிறப்பாக வீசி ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வாஷி 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். நியூசிலாந்து அணி 171 ரன்களை சேர்த்திருந்தது. இந்தியாவை விட 143 ரன்கள் முன்னிலை.
எஞ்சியிருக்கும் 1 விக்கெட்டை சீக்கிரமாக வீழ்த்தி இந்தியா வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும். சிறிய டார்கெட்டாக இருந்தாலும் தங்களின் தற்போதைய ஃபார்மை மனதில் வைத்து கொஞ்சம் பாதுகாப்பாக இந்திய பேட்டர்கள் ஆட வேண்டும்.