புளோரிடா: சிறிது காலம் செயல்படாமல் இருந்த நாசாவின் 47 ஆண்டு பழமையான வாயேஜர் 1 விண்கலத்துடன், ரேடியோ டிரான்ஸ்மிட்டர் உதவி மூலம் நாசா விஞ்ஞானிகள் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.
விண்வெளி ஆய்வுக்காக 47 ஆண்டுகளுக்கு முன்பு வாயேஜர் 1 என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. பூமியிலிருந்து 15 பில்லியன் மைல் தூரத்தை கடந்து சென்ற முதல் விண்கலம் வாயேஜர் 1 என்பது குறிப்பிடத்தக்கது. சூரியனின் சூழ் மண்டலத்தை தாண்டி, விண்மீன்களுக்கு இடையேயான பகுதிக்குள் வாயேஜர் விண்கலம் உள்ளது.
வியாழன் கிரகத்தை சுற்றி உள்ள மெல்லிய வளையம் போன்ற பகுதி, கிரகங்களை சுற்றிக் கொண்டிருக்கும் 5 புதிய நிலாக்கள், சனி கிரகத்தை சுற்றியுள்ள ஜி-வளையம் ஆகியவற்றை வாயேஜர் 1 விண்கலம் இதுவரை கண்டுபிடித்துள்ளது.
இந்த விண்கலம் சிறிது காலம் செயல்படாமல் இருந்தது. இதனுடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். வாயேஜர் விண்கலத்தில் எக்ஸ் பேண்ட், எஸ் பேண்ட் என்றஇரண்டு டிரான்ஸ்மிட்டர்கள் உள்ளன.பூமியிலிருந்து வாயேஜர் விண்கலத்துக்கு ஒரு தகவல் அனுப்பினால், அது சென்றடைய 23 மணி நேரம் ஆகும். அதேபோல் வாயேஜர் விண்கலத்தில் இருந்தும் தகவல் வர 23 மணி நேரம் ஆகும்.
கடந்த அக்டோபர் 16-ம் தேதி வாயேஜர் 1 விண்கலத்துக்கு நாசாவிஞ்ஞானிகள் ஒரு தகவல் அனுப்பினர். ஆனால் பதில் இல்லை. ஒருடிரான்ஸ்மிட்டரில் பிரச்சினை என்றால்,அது தானாக 2-வது டிரான்ஸ்மிட்டரை செயல்பட வைக்கும் வசதி வாயேஜர் விண்கலத்தில் செய்யப்பட்டிருந்தது. அதில் உள்ள எஸ்-பேண்ட் டிரான்ஸ்மிட்டர் வேறு ஒரு அலைவரிசையில் செயல்படும். அந்த அலைவரிசையை நாசா கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தவில்லை.
தற்போது அந்த அலைவரிசை மூலம் வாயேஜர் 1 விண்கலத்துக்கு கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு தகவல் அனுப்பப்பட்டது. அதிலிருந்து கடந்த மாதம் 24-ம் தேதி பதில் கிடைத்ததாக வயேஜர் விண்கலத்திட்ட மேலாளர் ப்ரூஸ் வேகனர் கூறியுள்ளார். ரேடியோ டிரான்ஸ்மிட்டர் உதவி மூலம் வாயேஜர் 1 விண்கலம் தற்போது பூமியுடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.