இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் சீன நாட்டினர் மீது கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 சீனர்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் சீன நாட்டினர் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தானில் 60 பில்லியன் டாலர் மதிப்பில் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதற்காக சீன நாட்டினர் பாகிஸ்தானில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
ஏற்றுக்கொள்ள முடியாது: இந்நிலையில் இந்த தாக்குதல்கள் குறித்து, கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தானுக்கான சீன தூதர் ஜியாங் ஜெய்டாங் பேசுகையில், “கடந்த 6 மாதத்தில்மட்டும் பாகிஸ்தானில் சீன நாட்டினர் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். சீனா வுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும்.
சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் தொடர்ந்து நடைபெற சீனர்களுக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தருவது அவசியம். சீன அதிபர் ஜி ஜின்பிங் தன் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர். குறிப்பாக, பாகிஸ்தானில் இருக்கும் சீனர்களின் பாதுகாப்பு குறித்து அவர் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார். எனவேதான் ஒவ்வொரு முறையும் அவர் பாகிஸ்தான் தலைவர்களைச் சந்திக்கையில், அங்குள்ள சீனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறார்” என்று தெரிவித்தார்.
இதற்கு கடந்த வியாழக்கிழமை பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் ஸகாரா பலோச் கூறுகையில், “சீனா – பாகிஸ்தான் இடையே நல்ல உறவு இருந்து வரும் சூழலில், சீனத் தூதரின் கருத்து குழப்பத்தைத் தருகிறது. எனினும், பாகிஸ்தானில் வேலை செய்யும் சீன நாட்டினரின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு உறுதி செய்கிறது” என்று தெரிவித்தார்.